Published : 08 May 2020 09:54 PM
Last Updated : 08 May 2020 09:54 PM

கோயம்பேட்டில் இருந்து எட்டயபுரம் வந்த தொழிலாளிக்கு காய்ச்சல்: அரசு மருத்துவமனையில் அனுமதி

கோவில்பட்டி

சென்னை கோயம்பேட்டில் இருந்து எட்டயபுரம் அருகே சொந்த கிராமத்துக்கு வந்த தொழிலாளிக்கு கடும் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எட்டயபுரம் அருகே அயன்வடமலாபுரம் ஊராட்சி அச்சங்குளத்தை சேர்ந்த 33 வயது இளைஞர் சென்னை கோயம்பேடு அருகே அமைந்தகரையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று மதுரைக்கு காய்கறி லாரி மூலம் வந்து, அங்கிருந்து சுமை ஆட்டோவில் தாப்பாத்தி விலக்கில் வந்து இறங்கி உள்ளார்.

அப்போது அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளதால் மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார். அவர், வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு, அயன்வடமலாபுரம் வந்து, அச்சங்குளத்துக்கு நடந்து சென்றுள்ளார். ஆனால், பாதியிலேயே சாலையில் மயங்கி விழுந்துவிட்டார்.

இதை பார்த்த கிராம மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், சுகாதாரம், வருவாய் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு எட்டயபுரம் வட்டாட்சியர் அழகர், சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் வந்து, மயங்கி கிடந்த தொழிலாளி அருகே யாரும் செல்லாதபடி பார்த்துக்கொண்டனர்.

தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் சிகிச்சைக்காக கோவில்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சளி மற்றும் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொழிலாளி மயங்கி கிடந்த அச்சங்குளம் செல்லும் சாலையில் தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x