Published : 08 May 2020 09:06 PM
Last Updated : 08 May 2020 09:06 PM
ஊரடங்கில் மது விற்பனை விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்த ஆளுநர் கிண்பேடியை சிபிஐ முதலில் விசாரிக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று (மே 8) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரியில் கரோனா தடுப்பு பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பது சம்மந்தமாக நாளை (மே 9) நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்போம்.
நம்முடைய மாநிலத்தை பொறுத்தவரை கலால்துறை மூலம் கிடைக்கின்ற வருவாயை நாம் முழுமையாக பயன்படுத்துவதற்கு ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும். பல மாநிலங்களில் மது மற்றும் பெட்ரோலிய பொருட்களுக்கு கோவிட் வரி விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் அது சம்பந்தமாக அமைச்சரவையில் கலந்தாலோசித்து முடிவு செய்வோம்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து புதுச்சேரி மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவது மட்டுமின்றி, மாநில அரசுக்கு குந்தகம் விலைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். அவருடைய செயல்பாடுகள் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்பது தான்.
கரோனா வைரஸ் தொற்று சமையத்தில் புதுச்சேரி மாநில மக்களுக்கு அரிசி கொடுக்கக்கூடாது என்று தடை போட்டார். இதுபோல் எங்கள் அரசுக்கு எதிராக பல கடிதங்களை மத்திய அரசுக்கு துணைநிலை ஆளுநர் எழுதியுள்ளார். 30-க்கும் மேற்பட்ட புகார்களை சிபிஐக்கு அனுப்பியுள்ளார்.
இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார். கரோனா தொற்றை தடுக்கும் பணியில் அனைத்து பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த சமையத்தில் மதுக்கடை உரிமையாளர்களை கணக்குகளை கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளார். அவர்கள் இச்சூழ்நிலையில் எங்களால் கணக்கு கொடுக்க முடியாது, கால அவகாசம் வேண்டும் என்று கேட்டு என்னிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
ஆனால் துணைநிலை ஆளுநர் தூண்டுதலின் பேரில் சில உரிமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கேட்ட காலக்கெடுவும் கொடுக்கப்படவில்லை. கிரண்பேடி தொடர்ந்து எந்தவித அதிகாரமும் இன்றி நேரடியாக தலையிட்டு அதிகாரிகளுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்.
ஊரடங்கில் மது விற்பனை தொடர்பாக சிபிஐயிடம் கிரண்பேடி கொடுத்த புகாரை பொறுத்தவரையில் முதலில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். நான் சிபிஐ அமைச்சராக இருந்தவன். எனக்கு சிபிஐயின் நிர்வாகம் முழுமையாக தெரியும். அவர் அதிகாரிகளை மிரட்டுவதற்காக கலால்துறை பிரச்சினையில் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்துள்ளார். மேலும் பொதுமக்களும் சிபிஐக்கு புகார் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது கிரண்பேடியின் வேலை அல்ல. கலால்துறையில் உரிமம் பெற்ற மதுக்கடை உரிமையாளர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கலால்துறை நடவடிக்கை எடுக்கும். கிரண்பேடிக்கும் அதற்கும் என்ன சம்மந்தம் உள்ளது. கிரண்பேடி ஏன் அதிகப்படியாக சிபிஐ விசாரணையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தன்னுடைய தகுதிக்கும், பதவிக்கும் ஏற்காத காரியத்தை செய்து கொண்டிருக்கிறார்? இதனை புதுச்சேரி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கரோனா தொற்றை தடுத்து நிறுத்தும் வேலையில் இருக்கின்ற சமயத்தில் அதிகாரிகளை திசைத்திருப்பி, தினமும் அதிகாரிகளுடன் 30 வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி, அவர்களின் நேரத்தை வீணடித்து, எங்கள் நிர்வாகத்தில் தலையிட்டு கரோனா தடுப்பு பணியை செய்யவிடாமல், செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது. அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
நாங்கள் மக்களுக்கு பணி செய்ய இருக்கிறோம். ஆனால் கிரண்பேடி மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார். மக்களுக்கான எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை தடுத்து நிறுத்துவது கிரண்பேடியின் வேலையாக இருக்கிறது. ஏற்கெனவே நான் இது சம்பந்தமாக பேசாமல் இருந்தேன். பொய் வழக்குகள் போட ஆரம்பித்த பிறகு நாங்கள் பேசாமல் இருந்தால் சரியாக இருக்காது.
அதிகார துஷ்பிரயோகம், எல்லோருக்கும் தொல்லை கொடுப்பதை தனது வேலையாக வைத்துக்கொண்டுள்ளார். யார் தவறு செய்தாலும் எங்கள் அரசு அவர்களை காப்பாற்றாது. ஆனால் தவறு செய்யாதவர்கள் மீது பொய் வழக்கு போட நினைத்தால் அவர்களை காப்பாற்ற எங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும். இதுதான் எங்கள் அரசின் கொள்கை. இதனை கிரண்பேடி தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
தினமும் தொல்லை கொடுப்பதையே தன்னுடைய செயலாக வைத்துக்கொண்டு செயல்படும் கிரண்பேடி அதை முழுமையாக நிறுத்திக்கொள்ள வேண்டும். மாநில அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். மாநில வளர்ச்சிக்கு எங்களுடன் இணைந்து பாடுபட வேண்டும். கரோனா தொற்றை ஒழிக்க மாநில அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
நான் மத்திய இணையமைச்சராக இருந்துள்ளேன். 23 ஆண்டுகாலம் நாடாளுமன்றத்தில் பணிபுரிந்துள்ளேன். இப்போது 4 ஆண்டுகாலம் முதல்வராக இருக்கின்றேன். இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் நாங்கள் வந்துள்ளோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஒரு துணைநிலை ஆளுநருக்கு அழகல்ல.
அவருடைய நடவடிக்கை காவல்துறை பணியாளர் செய்யும் வேலையை போன்றுள்ளது. அவருடைய இந்த செயல்பாடுகள் சம்பந்தமாக முழுமையான கடிதம் பிரதமருக்கு எழுதியுள்ளேன். அவர்களும் அதனை பரிசீலனை செய்து வருகின்றனர். விரைவில் இதற்கு முடிவு ஏற்படும்"
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT