Published : 08 May 2020 08:54 PM
Last Updated : 08 May 2020 08:54 PM
ரசாயன தொழிற்சாலைகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் வாரியம், அவை இயங்கக்கூடிய நிலையில் உள்ளனவா என்று சோதித்து சான்றளிக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, திருமாவளவன் இன்று (மே 8) வெளியிட்ட அறிக்கையில், "ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எல்.ஜி. என்ற தென்கொரிய நிறுவனத்துக்குச் சொந்தமான ரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவால் பத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 5,000-க்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகுந்த வேதனையளிக்கிறது.
இவ்விபத்து குறித்து உரிய புலனாய்வு விசாரணை நடத்தி, உயிரிழந்தோர் மற்றும் பிற பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்குப் போதிய இழப்பீடும் வாழ்வாதாரப் பாதுகாப்பும் அளித்திட மத்திய அரசும் ஆந்திர மாநில அரசும் முன்வர வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
ஸ்டைரீன் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தும் அந்த ஆலையைப்போலவே தமிழ்நாட்டிலும் அதே வேதிப்பொருளைப் பயன்படுத்தி பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் ரசாயன ஆலைகள் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருக்கின்றன.
சுமார் இரண்டு மாத கால முழு அடைப்புக்குப் பிறகு மீண்டும் அந்த ஆலைகளை இயங்க அனுமதிக்கும் முன்னர், அவை சரியான நிலையில் உள்ளனவா என்பதை சோதித்து சுற்றுச்சூழல் துறை சான்றளிக்க வேண்டும். அவ்வாறு சான்று அளித்த பின்பே அந்த ஆலைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இந்தியாவில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்ததாக அதிக அளவில் ரசாயன தொழிற்சாலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். அதிலும் சிவப்பு பிராந்தியங்கள் என்று வகைப்படுத்தப்பட்ட ஆபத்தான ரசாயன ஆலைகள் கடலூர் உள்ளிட்ட பல இடங்களில் இருக்கின்றன. நீண்ட நாட்களாகப் பராமரிப்பின்றி மூடிக்கிடக்கும் அந்த ஆலைகள் மீண்டும் இயங்கும்போது விசாகப்பட்டினத்தில் ஏற்பட்டது போன்ற விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, ரசாயன தொழிற்சாலைகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் வாரியம், அவை இயங்கக்கூடிய நிலையில் உள்ளனவா என்று சோதித்து சான்றளிக்க வேண்டும். அவ்வாறு சான்று பெறாமல் எந்த ரசாயன ஆலையையும் இயக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது" என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT