Published : 08 May 2020 07:55 PM
Last Updated : 08 May 2020 07:55 PM

நீதிமன்ற நிபந்தனைகள் மீறல்: டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற நிபந்தனைகள் பின்பற்றப்படாததால் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என்றும், ஆன்லைனில் விற்று டோர் டெலிவரி செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மே 7-ம் தேதி முதல் மதுக்கடைகளைத் திறக்க அனுமதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மே 6-ல் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும், ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே வழங்க வேண்டும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் ஒருவருக்கு மது வழங்க வேண்டும்.

அதற்கு மதுபானம் வாங்குபவரின் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது. அவை மீறப்படும் பட்சத்தில் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்து அனுமதி அளித்தது.

இந்நிலையில் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அதுவரை நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிடக் கோரியும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளரும், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான மௌரியா வழக்குத் தொடர்ந்தார்.

அவரது மனுவில், “மதுபானத்துக்காக குடிமகன்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லக் கூடும் என்பதால் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதாக அரசு கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. ஊரடங்கு அமலில் உள்ளபோது அனுமதியின்றி அண்டை மாநிலங்களுக்குச் செல்பவர்களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை.

கரோனா பரவாமல் தடுக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் எனக் கூறி வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுவை விற்க அனுமதிப்பது நோய் பாதிப்பை அதிகரிக்கும்'' என்று குறிப்பிட்டார்.

இந்த மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா ஆஜராகி வாதிட்டார்.

நேற்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை. மே 6-ம் தேதி அன்று நீதிமன்ற உத்தரவில் தனி மனித இடைவெளி, கூட்டம் சேரக்கூடாது, 5 பேருக்கு மேல் நிற்கக்கூடாது என்ற உத்தரவு மீறப்பட்டதாகக் கூறினார். அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் கார்த்திக் ராஜா தாக்கல் செய்தார்.

மேலும் அவர் வாதிடுகையில், ''தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. கூட்டம் அதிகமாகக் கூடியது. தனி மனித இடைவெளி கடைப்பிடிக்க முடியாதபோது மதுபானம் அத்தியாவசியப் பொருட்களின் கீழ் வராத நிலையில் எப்படி அனுமதிக்கப்படுகிறது. குற்றச்செயல்கள் அதிகம் நடக்கின்றது. காய்கறி மளிகைப்பொருட்கள் ஆன்லைனில் விநியோகிப்பது போல் மதுபானங்களை விநியோகிக்கலாம்'' என்றார்.

ஆன்லைனில் 2 பாட்டில்களுக்கு மேல் கொடுக்கக்கூடாது, பில் தரவேண்டும். ஆதார் எண் அவசியம், தனி மனித இடைவெளி, கும்பல் சேரக்கூடாது, இவை மீறப்பட்டால் கடைகளை அடைக்கும்படி உத்தரவிட நேரிடும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது சுட்டிக்காட்டப்பட்டது.

அதேபோல வழக்கறிஞர் ஜி. ராஜேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தற்போது டாஸ்மாக் கடைகள் திறந்து இருப்பதால் தனிமனித இடைவேளை பின்பற்றவில்லை எனவே ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்

குன்றத்தூர் சேர்ந்த வழக்கறிஞர் திலீபன் தாக்கல் செய்த வழக்கில் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் இதே போல சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூட கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்கிலும் வழக்கிலும் மதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு

நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படக்கூடாது என்றும், ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி செய்யலாம் என்றும் டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை மே.14-க்கு ஒத்திவைத்தது.

இதனால் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x