Published : 08 May 2020 04:53 PM
Last Updated : 08 May 2020 04:53 PM
வடமாநில வியாபாரிகளை நம்பியே சேலத்தில் வெள்ளித் தொழில் இயங்கி வருகிறது. தற்போது, பேருந்து, ரயில் இயக்கம் முழுவதும் முடக்கப்பட்ட நிலையில், வெள்ளித் தொழில் முடங்கி, தொழிலாளர்கள் குடும்பத்தினர் வறுமையில் வாடி வதங்கி வருகின்றனர் என சேலம் மாவட்டக் கொலுசு உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் ஜெகதீஷ் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விளங்கும் வெள்ளிக் கொலுசு உற்பத்தியில் 1.5 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். சேலம் செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, பொன்னம்மாபேட்டை, குகை, இளம்பிள்ளை உள்பட 60 கிராமப் பகுதிகளில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இங்கு தயாரிக்கப்படும் வெள்ளிக் கொலுசுகள், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
வெள்ளிக் கொலுசுகள் பல்வேறு வடிவமைப்பு, ரகங்களில் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கும் வெள்ளிக் கொலுசு பளபளப்பாகவும், அழகுறக் காண்போரின் கண்களைக் கவரும் வடிவமைப்பிலும் உள்ளதால், நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்கள் ரகம், வடிமைப்புக்கு ஏற்ற வகையில் கிலோவுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை கூலியாகப் பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்ட உற்பத்தியாளர்கள் பிரத்யேகமான முறையில், கலைநயத்துடன் வெள்ளிக் கொலுசு, மெட்டி, அரைஞாண் கயிறு வடிவமைத்துக் கொடுக்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தில் உள்ள தங்க, வெள்ளி நகைக் கடைக்காரர்கள், சேலம் வெள்ளி செயின் உற்பத்தியாளர்களிடம் வெள்ளியைக் கொடுத்து, அதற்கு மாற்றாக கொலுசு, மெட்டி, அரைஞாண் கயிறாக வாங்கிக் கொள்கின்றனர்.
சேலத்தில் இருந்து சராசரியாக 50 டன் அளவுக்கு வெள்ளிக் கொலுசு மற்றும் வெள்ளியிலான ஆபரணப் பொருட்கள் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. கரோனா தொற்று நோய்ப் பரவல் தடுப்பால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், சேலம் மாவட்டத்தில் 1.50 லட்சம் குடும்பத்தினர் வெள்ளிக் கொலுசு தயாரிப்புப் பணி மேற்கொள்ள வழியின்றி வறுமையில் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வடமாநில ரயில் போக்குவரத்தும், உள்ளூர் பேருந்து போக்குவரத்தும் மீண்டும் ஆரம்பித்தால் மட்டுமே வெள்ளித் தொழில் உயிர்த்தெழ வாய்ப்பு உள்ளதாக தொழிலாளர்களின் குடும்பத்தினர் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.
இதுகுறித்து சேலம் மாவட்ட வெள்ளி செயின் (கொலுசு) உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் ஜெகதீஷ் கூறியதாவது:
"சேலம் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேர் வெள்ளிக் கொலுசு, மெட்டி, அரைஞாண் கயிறு உற்பத்தியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர். கரோனா நோய்த்தொற்று காரணமாக முழு ஊரடங்கால், வெள்ளித் தொழில் நலிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டது. இத்தொழில் சார்ந்த குடும்பத்தினர் வருமானம் இன்றி பெரும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
வடமாநில வியாபாரிகளை நம்பியே சேலத்தில் வெள்ளித் தொழில் இயங்கி வருகிறது. தற்போது, பேருந்து, ரயில் இயக்கம் முழுவதும் முடக்கப்பட்ட நிலையில், வெள்ளித் தொழில் முடங்கி, தொழிலாளர்கள் குடும்பத்தினர் வறுமையில் வாடி வதங்கி வருகின்றனர்".
இவ்வாறு ஜெகதீஷ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT