Published : 08 May 2020 03:07 PM
Last Updated : 08 May 2020 03:07 PM
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் புதிதாக மேலும் 2,570 ஒப்பந்த செவிலியர்கள் 6 மாத காலத்துக்குப் பணியமர்த்தப்படுகின்றனர். இதற்கான உத்தரவை முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் தேவை அதிகம் உள்ளது. கரோனா தடுப்புப் பணிக்காக மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள்,1508 ஆய்வக நுட்புனர்கள் மற்றும் 2715 சுகாதார ஆய்வாளர்களை தமிழக அரசு ஏற்கெனவே பணியமர்த்தியது.
இந்நிலையில் மீண்டும் ஒப்பந்த செவிலியர்களைப் பணியமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த தமிழக அரசின் அறிவிப்பு:
“6 மாத காலங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2,570 ஒப்பந்த செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இந்த செவிலியர்கள் பணி நியமன ஆணை பெற்ற 3 தினங்களுக்குள் பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருத்துவக் கல்லூரிகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்கள் நியமிக்கப்படுவர்.
தாலுகா மருத்துவமனைகளுக்குத் தேவைக்கேற்ப தலா 10 முதல் 30 செவிலியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்” .
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT