Published : 08 May 2020 02:16 PM
Last Updated : 08 May 2020 02:16 PM
ஊரடங்கிற்கு பிறகு நேற்று முதல் நாள் அரசு டாஸ்மாக் கடைகளில் நடந்த மது விற்பனையில் மதுரை மண்டலத்தில் ரூ.46.78 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதில், திருநெல்வேலியில் ரூ.6.4 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
‘கரோனா’ ஊரடங்கால் தமிழகத்தில் 5,300 கடைகள் செயல்படுகின்றன. அரசுக்கு இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் ஆண்டிற்கு ரூ.36,752 கோடி வருவாய் கிடைத்து வருகிறது.
தமிழகத்தில் அரசு டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து 43 நாட்கள் திறக்கப்படவில்லை. இதனால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பும், நிதி நெருக்கடியும் ஏற்பட்டது. ஆனால், பொதுமக்கள் ‘‘மது குடிப்பதை கைவிட்டவர்கள் திருந்த இந்த ஊரடங்கு ஒரு வாய்பாக இருக்கட்டும், மூடிய கடைகள் மூடப்பட்டதாகவே இருக்கட்டும், ’’ என வலியுறுத்தினர்.
மன நல மருத்துவ நிபுணர்களும், ‘‘மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் திருந்திய மதுப்பிரியவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார்கள், ’’ என எச்சரித்தனர்.
இந்நிலையில் நேற்று 7ம் தேதி முதல் தமிழகத்தில் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் அரசு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
சென்னை மண்டலத்தில் சென்னை தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
அதனால்,மொத்தமுள்ள 5300 கடைகளில் 3,850 டாஸ்மாக் கடைகள் மட்டுமே நேற்று செயல்பட்டன. காலை முதலே மதுப் பிரியவர்கள் டாஸ்மாக் கடைகள் முன் வரிசை கட்டி நின்றனர். அதனால், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.172.59 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.172.59 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் மட்டுமே இந்த விற்பனை நடந்துள்ளது. சென்னையிலும் விற்பனை நடந்திருந்தால் இன்னும் கூடுதலாக விற்பனை நடந்து இருக்கும்.
மதுரை மண்டலத்தில் தமிழகத்தில்அதிகப்பட்சமாக ரூ.46.78 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் திருச்சி மண்டலத்தில் ரூ.45.67 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.41.56 கோடிக்கும், கோவை மண்டலடத்தில் ரூ.28.42 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் 10.16 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.
மதுரை மண்டலத்தில் மதுரை மாவட்டத்தில் மதுரை தெற்கு மாவட்டத்தில்(புறநகர் மாவட்ட கடைகள்) ரூ.4.5 கோடிக்கும் வடக்கு மாவட்டத்தில் (மேலூர் உள்பட மதுரை மாநகராட்சி கடைகள்) ரூ. 4.2 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. மதுரை மண்டலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகப்பட்சமாக ரூ.6.4 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT