Published : 08 May 2020 02:29 PM
Last Updated : 08 May 2020 02:29 PM
கோடைக்காகத் தண்ணீர் ஊற்றி வைக்க பானைகள் தயாராகியும் கரோனா அச்சுறுத்தலால் போக்குவரத்து நிறுத்தம் மற்றும் ஊரடங்கால் மண்பானைகளை விற்பனைக்கு அனுப்ப முடியாததால் மண்பாண்டத் தொழிலாளர்கள் வாழ்வு கண்ணீர் மயமாகியுள்ளது.
புதுச்சேரி முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் உள்ளனர். ஆண்டு முழுவதும் 900க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தின் மையமே கோடைக்காலம்தான். கோடையில்தான் வீடுகளிலும் கடைகளிலும் மற்றும் பல்வேறு பொது இடங்களிலும் மண்பானைகளில் தண்ணீரை நிரப்பி மக்கள் பயன்படுத்துவார்கள். மண்பானையில் தண்ணீர் நிரப்பிப் பயன்படுத்துவதால் உடல் சூடு அடையாது. குளிர்ச்சியாக இருக்கும். உடலுக்கும் நல்லது என்பதால் காலம்தொட்டுப் பலரும் பயன்படுத்துவார்கள். வழக்கமாகவே மண்பாண்டத் தொழில் நசிந்து வந்து சூழலில் தற்போதைய கரோனா அச்சுறுத்தல் அதை முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது.
மண்பாண்ட உற்பத்தியாளர் சக்திவேல் கூறுகையில், "புதுச்சேரியில் இருந்து ஆண்டுதோறும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மண்பானைகளை விதவிதமாகச் செய்து பல இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்புவோம். தற்போது பானைகளில் குழாய் வைத்தும், அலங்கரித்தும் தயாரிக்கிறோம். இப்பணிகளை கோடைக்காலம் தொடங்கும் முன் நிறைவு செய்தோம்.
அந்நேரத்தில் கரோனா அச்சுறுத்தலால் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பானைகளை வேறு இடங்களுக்கும், மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்ல முடியாமல் தேங்கி இருக்கின்றன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பானைகள் உற்பத்தியாகியும் ஒரு பானை கூட விற்க அனுப்ப முடியவில்லை" என்கிறார் கண்ணீருடன்.
மண்பாண்டத் தொழிலில் ஈடுபடுவோர் முற்றிலும் பாதித்துள்ள சூழலில் உள்ளூரிலும் மக்கள் அதிக அளவில் வந்து தற்போது மண்பாண்டங்களை வாங்க வராததால் தங்களின் வாழ்வாதாரத்தை அரசு காக்குமா என்ற எதிர்பார்ப்பில் மண்பாண்டத் தொழிலாளர்கள் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT