Published : 08 May 2020 01:32 PM
Last Updated : 08 May 2020 01:32 PM
புதுச்சேரியில் கரோனா சிகிச்சையில் இருந்த இருவர் குணமடைந்து வீடு திரும்பியதால் தற்போது இருவர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று நிலவரம் தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (மே 8) கூறியதாவது:
"கரோனா தொற்றுக்காக புதுச்சேரியில் இருவரும், மாஹே பிராந்தியத்தில் ஒருவரும் சிகிச்சையில் இருந்தனர். அதில் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரும், மாஹே பிராந்தியத்தில் சிகிச்சையில் இருந்தவரும் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில் புதுச்சேரி மதகடிப்பட்டு குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நபருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து புதுச்சேரியில் 2 பேர் மட்டும் கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நபரும் புதியதாக நேற்று வந்த மற்றொரு விழுப்புரம் நபரும் ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.
தற்போது கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த 3 பேர் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
வெளிமாநிலத்தவர்களை ஜிப்மரில் அனுமதிக்க முதல்வர் நாராயணசாமி மத்திய அமைச்சருக்குத் தெரிவித்ததன் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 11 பேர் மற்றும் மாஹேவில் 2 பேர் என மொத்தம் 13 பேர் கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டனர். இதுவரை 11 பேர் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது இருவர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அவர்களின் உடல் நலனும் முன்னேற்றத்தில் உள்ளது. புதுச்சேரி கரோனா தொற்று இல்லாமல் இருக்க இங்குள்ளோர் வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம்".
இவ்வாறு புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
கிராமத்துக்கு சீல்
புதுச்சேரியில் லாரி ஓட்டுநருக்கு கரோனா தொற்று உறுதியாகி அவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து குச்சிப்பாளையம் கிராமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவரது தாய், மனைவி, குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநர் பல இடங்களுக்குச் சென்றுள்ளதால் அவர் மூலம் யாருக்கும் பரவியுள்ளதா என்பதையும் சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT