Published : 08 May 2020 12:51 PM
Last Updated : 08 May 2020 12:51 PM
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், மது விற்பனை நேற்று மீண்டும் தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதும் ரூ.172 கோடிக்கு மது விற்பனையாகி இமாலய சாதனை படைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பண்டிகைக் காலங்களில் விற்கப்படும் அளவுக்கு மது விற்பனை ஆகியுள்ளது.
கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலானது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களைத் தவிர அனைத்தும் மூடப்பட்டன. இதில் மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் பல பத்தாண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் மதுவிலக்கு போன்றதொரு நிலை 40 நாட்களாக நிலவியது. குடி இல்லாமல் வாழவே முடியாது என்று பலரும் கூறிய நிலையில் 44 நாட்கள் வெற்றிகரமாக மது இல்லாத தமிழகமாக இருந்தது.
இந்நிலையில் மே 4-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. அதன் ஒருகட்டமாக மதுக்கடைகளை மே 7-ம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஏற்கெனவே கோயம்பேடு மார்க்கெட் விவகாரத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் மதுக்கடைகளைத் திறந்தால் அது சமூக இடைவெளி இல்லாமல் மதுப்பிரியர்கள் முண்டியடித்து மது வாங்கும் நிலையை ஏற்படுத்தும். இதனால் மேலும் கரோனா தொற்று அதிகரிக்கும். மதுவால் ஏற்கெனவே முடக்கத்தில் வருமானம் இன்றி வாடும் குடும்பத்தினர் மேலும் பாதிக்கப்படுவார்கள். வன்முறை அதிகரிக்கும் என்று கூறினாலும் மதுக்கடைகளை அரசு திறந்தது.
நேற்று காலை முதல் மதுக்கடை முன் குடிமகன்கள் முண்டியடித்து சமூக விலகல் இன்றி நின்று மதுவை வாங்கிச் சென்றனர். சென்னையில் தொற்று அதிகமாக இருந்ததால் சென்னை மாவட்டத்தில் மட்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் மற்ற மாநிலங்களை விட 3 மடங்கு மது விற்பனை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் ரூ.172.51 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. இதுபோன்ற விற்பனை தீபாவளி, பொங்கல், புத்தாண்டு நேரங்களில் மட்டுமே ஆகும். சராசரியாக 60 முதல் 70 கோடி ரூபாய்க்கு மது விற்பனை இருக்கும்.
44 நாட்களுக்குப் பின் மது விற்பனை ஆரம்பித்ததால் பண்டிகை மனோபாவத்துடன் மதுப்பிரியர்கள் கொண்டாடியுள்ளனர்.
சென்னையில் மதுபானக் கடைகள் திறக்கத் தடை என்பதால் 172.51 கோடியோடு நின்றது. இல்லாவிட்டால் ரூ.200 கோடியைத் தொட்டிருக்கக்கூடும்.
மதுக்கடைகளைப் பொறுத்தவரை டாஸ்மாக் நிர்வாகம் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் என மண்டல அளவில் பிரித்துள்ளது.
இதில் உச்சபட்சமாக மதுரை மண்டலத்தில் நேற்று அதிக அளவில் மது விற்பனை ஆகியுள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ 46.78 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ. 45.67 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.41.56 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.28.42 கோடியும், சென்னை மண்டலத்தில் சென்னையில் விற்பனை தடை செய்யப்பட்டு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே விற்பனையானதால் குறைவாக ரூ.10.16 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.
நேற்று மது விற்பனை தொடங்கியதால் கூடவே தமிழகத்தில் 44 நாட்களாக இல்லாத கொலை, மோதல், குடும்ப வன்முறை, வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்தன. தந்தை மது குடிப்பதைத் தடுக்க முடியாத மகளும், தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், நெல்லை செட்டிக்குளத்தில் தாயை வெட்டிக்கொன்ற மகன், திருச்சியில் இரு பிரிவினரிடையே மோதல், ஆலங்குடியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் 10க்கும் மேற்பட்டோர் மோதல், அரியலூர் சுத்தமல்லி போராட்டம் என போலீஸாருக்கு மேலும் பணிப்பளு அதிகரித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT