Published : 08 May 2020 12:23 PM
Last Updated : 08 May 2020 12:23 PM

முன்னாள் அமைச்சர் கு.லாரன்ஸ் காலமானார்: இன்று மாலை தக்கலையில் நல்லடக்கம்

திமுகவின் மாநில சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கு.லாரன்ஸ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 73.

அதிமுக ஆட்சியில் 1993 முதல் 1996 வரை அமைச்சராக இருந்தவர் கு.லாரன்ஸ். காமராஜர் அமைச்சரவையில் அங்கம் வகித்த லூர்தம்மாளுக்குப் பிறகு, முப்பது ஆண்டுகளுக்குப் பின்பு குமரி மாவட்டத்துக்குக் கிடைத்த அமைச்சரும் இவர்தான். அதிமுகவில் மாவட்டச் செயலாளர், சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர் பிறகு திமுகவில் இணைந்தார். திமுகவில் அவருக்கு மாநில சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.

சட்டம் படித்த லாரன்ஸ், சிறந்த பாட்மிண்டன் விளையாட்டு வீரர். தக்கலையில் லாரன்ஸ் பாட்மிண்டன் கிளப் நடத்தி வந்த இவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள், மாணவர்களுக்கு இலவசப் பயிற்சியும் வழங்கி வந்தார். இந்த நிலையில், உடல் நலக்குறைவால் இன்று காலமானார் லாரன்ஸ்.

அவரது உடல், சொந்த ஊரான தக்கலையில் இன்று மாலையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x