

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் அலுவலகங்கள் 33 சதவீதப் பணியாளர்களைக் கொண்டு செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. எனினும், பணியாளர்களைத் தவிர மற்ற யாரும் கோயிலுக்குள் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோயில் பணியாளர்களை அனுமதிப்பது போல் பக்தர்களையும் தனி மனித இடைவெளியுடன் இறைவனை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம.சேயோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:
’’மார்ச் மாதம் 25-ம் தேதியிலிருந்து பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் தமிழகத்தில் கோயில்களின் நடை சாத்தப்பட்டு, நித்திய பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி இல்லை. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த பங்குனி, சித்திரை மாதக் கோயில் திருவிழாக்கள் அனைத்தும் அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. உக்கிர தெய்வங்களான பிரத்தியங்கிரா, சரபேஸ்வரர், காலபைரவர், சூலினி வழிபாடுகள் எல்லாம் தற்போது தடை செய்யப்பட்டு திருவிழாக்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது ஆன்மிக நம்பிக்கைப்படி உக்கிர தெய்வங்களின் கோபத்தை மக்கள் மீதும் ஆள்பவர்கள் மீதும் காட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தற்போது 45 நாட்கள் கடந்து விட்ட நிலையில், தமிழக அரசு பொதுமுடக்க காலத்திலும் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறந்து கரோனா பரவுவதைத் தடுப்பதில் பேராபத்தை உண்டாக்கியிருக்கிறது. டாஸ்மாக்கைத் திறக்கும்போது, சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வழிபடத் திருக்கோயில்களைத் திறப்பதற்கு மட்டும் தடை இருக்க முடியாது.
தற்போது கடைகளுக்குத் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளும் நிபந்தனைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் 33 சதவீத தொழிலாளர்களுடன் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அன்றாடம் வழிபட வேண்டிய திருக்கோயில்களில் வழிபாடு இன்னும் அனுமதிக்கப்படவில்லை.
டாஸ்மாக் கடைகளைத் திறந்து தனிமனித இடைவெளியுடன் மதுப்பிரியர்கள் மது வாங்குவதற்கு உரிய காவல் பாதுகாப்புக் கொடுப்பது போல திருக்கோயில்களைத் திறந்து தனிமனித விலகலைக் கடைபிடித்து பக்தர்கள் இறைவனைத் தரிசிக்கவும் பிரார்த்தனை செய்யவும் உரிய காவல் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்’’.
இவ்வாறு ராம.சேயோன் கேட்டுக் கொண்டுள்ளார்.