Published : 08 May 2020 10:14 AM
Last Updated : 08 May 2020 10:14 AM

தமிழக அரசு கோரியுள்ள ரூ.18,321 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

தமிழக அரசு கோரியுள்ள ரூ.18 ஆயிரத்து 321 கோடி நிதி உதவியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மே 8) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா தாக்கத்தில் தமிழகமும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த நோய்த்தொற்று எதிர்பாராத ஒன்று.

தமிழகத்தில் நோய்த் தடுப்புக்காக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நோய் பரவலைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல், நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ வசதி அளித்தல், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விலையில்லா உணவுப்பொருட்கள் வழங்குதல், அன்றாடம் உழைத்துப் பிழைப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல், அம்மா உணவகத்தின் மூலம் இலவச உணவு வழங்குதல் போன்ற சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது.

மேலும், 40 நாட்கள் ஊரடங்கால் தமிழ்நாட்டின் வரி வருவாய் குறைந்துவிட்டது என்பது மட்டுமல்ல வருவாய் ஈட்டுவதற்கும் இப்போதைக்கு வழியில்லை என்பதை எல்லோரும் அறிவர். அதேசமயம் கூடுதல் நிதி தேவை என்பதையும் அனைவரும் உணர்வர். இந்நிலையில், தமிழக அரசின் நிபுணர் குழு சரியாகக் கணித்த மாநிலத்தின் நிதித்தேவைக்கான கருத்துருவை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

தமிழக அரசும் கரோனா தடுப்புக்காக ஏற்கெனவே ரூ.9,000 கோடி கேட்ட பிறகு மத்திய அரசு ரூ.500 கோடி விடுவித்தது. இருப்பினும் கரோனவினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகிக்கொண்டே போவதால் தமிழக அரசு மீண்டும் ரூ.3,200 கோடி நிதி ஒதுக்கவும், கடனுக்கான உச்ச வரம்பை உயர்த்திக் கொடுக்கவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு முன்வைத்தது.

எனவே, தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்கினால்தான் தமிழக மக்களுக்கு உதவிகள் செய்திட ஏதுவாக இருக்கும். ஆனால், இதுவரையில் தமிழகத்துக்கு மத்திய அரசு விடுவித்த நிதி போதுமானதல்ல. மேலும், மத்திய அரசின் நிபுணர் குழுவும் தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்த ஆய்வும் மேற்கொண்டுள்ளது. இது சம்பந்தமான அறிக்கையும் மத்திய அரசுக்குத் தெரியும்.

எனவே, தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்படுகின்ற மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு கோரியுள்ள ரூ.18 ஆயிரத்து 321 கோடி நிதி உதவியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x