Published : 08 May 2020 07:33 AM
Last Updated : 08 May 2020 07:33 AM
விசாகப்பட்டினத்தில் இயங்கி வரும் எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வலியுறுத்தி உள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையில் நேற்று விஷவாயு கசிந்தது. இதில் 11 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். ஆர்.ஆர். வெங்கடாபுரத்தை சேர்ந்த நவீன் என்ற இளைஞர், விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட தன்னுடைய அனுபவத்தை கூறியதாவது:
எல்.ஜி. தொழிற்சாலையின் அருகில்தான் எங்களின் வீடு உள்ளது. அதிகாலை சுமார் 2.30 மணி இருக்கும். திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. வீட்டில் இருந்தவர்களுக்கும் அதே நிலை. உடனடியாக அனைவரும் எழுந்து வெளியில் வந்து பார்த்தோம். ஒரே புகை மூட்டமாக இருந்தது. ஆனால், உடனே கண்களில் பயங்கரமாக எரிச்சல் உண்டானது. கண்களில் இருந்து நீர் கசிந்து கொண்டே இருந்தது.
இதனால் நாங்கள் பயந்து போய் முகக் கவசம் அணிந்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு வெளியில் ஓடிவிட்டோம். ஆனால், நாங்கள் ஓடும் போதே பலர் மூச்சுத் திணறி மயங்கி கீழே விழுந்தனர். இதை பார்க்கும் போது பரிதாபமும், பயமும் ஏற்பட்டது. ஆனால், இதை எல்லாம் கண்டும் காணாதது போல் எல்.ஜி. தொழிற்சங்க மேலதிகாரிகள் அவர்களது வீடுகளை பூட்டிக்கொண்டு வீட்டுக்குள் பத்திரமாக இருந்தனர்.
ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு கூட இதேபோல் விஷவாயு கசிவு நடந்தது. ஆனால் அதனை மூடி மறைத்து விட்டனர். மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இந்த ராசாயனத் தொழிற்சாலையை மூட வேண்டும்.
இவ்வாறு நவீன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT