Published : 07 May 2020 07:53 PM
Last Updated : 07 May 2020 07:53 PM
மினிவேனில் கரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டி திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி வேல்ராம்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக முதலியார்பேட்டை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் தமிழரசன் மற்றும் போலீஸார் நேற்று மாலை சம்பவ இடத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியதால் போலீஸார் அவர்களின் சட்டைப் பையில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் கஞ்சா பாக்கெட்டுகளை சட்டைப் பையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த போலீஸார் அவர்களைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் முருங்கப்பாக்கம் சேத்திலால் நகரைச் சேர்ந்த அன்பு (எ) அன்பரசன் (20), முருங்கப்பாக்கம் குமாரவேலு நகரைச் சேர்ந்த சிவகாஷ் (21) என்பதும், இவர்கள் நைனார்மண்டபத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன் (19), விஜி, ஓட்டுநர் ஜான் பாட்ஷா ஆகியோருடன் சேர்ந்து மினிவேனில் கரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டி திருவண்ணாமலையிலிருந்து கஞ்சாவைக் கடத்தி வந்து புதுச்சேரியில் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விற்றுவந்தது தெரியவந்தது.
இதையடுத்து அன்பரசன் உள்ளிட்ட 5 பேரையும் இன்று (மே 7) கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்த 150 கிராம் அளவு கொண்ட 52 கஞ்சா பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்திய மினிவேன், இருசக்கர வாகனம், 3 செல்போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT