Published : 07 May 2020 05:15 PM
Last Updated : 07 May 2020 05:15 PM
புதுச்சேரியில் மதுக்கடைகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (மே 7) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரியில் 71 பேருக்கு நேற்று உமிழ்நீர் எடுக்கப்பட்டுப் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையில் கரோனா தொற்றுப் பரிசோதனைக்கு வந்துள்ளார்.
அவரைப் பரிசோதனை செய்தபோது அவருக்குத் தொற்று இல்லை என்று ஜிப்மர் மருத்துவமனை வீட்டுக்கு அனுப்பியது. அவரது தாயார் ஜிப்மரில் பணிபுரிகிறார்.
பின்னர் அவர்கள் கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவரை அங்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த நபர் எப்போது புதுச்சேரிக்கு வந்தார், யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை வருவாய்த்துறை, காவல்துறை பணியாளர்கள் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரியும், தமிழகமும் பின்னிப் பிணைந்துள்ளது. புதுச்சேரியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல வேண்டுமானால் இடையிடையே தமிழகம் வருகிறது.
தமிழகத்தில் இருந்து காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இங்கு வருகின்றன. அதுபோல் இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை தமிழகத்துக்கு அனுப்புகிறோம்.
எனவே, இரண்டு மாநில எல்லைகளின் அருகில் இருப்பவர்களைப் பரிசோதனை செய்து உள்ளே அனுப்பலாமே தவிர அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆகவே காவல்துறை, மருத்துவ அதிகாரிகளுடன் கலந்து பேசி, உள்ளே அனுமதிக்க அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்குச் செல்பவர்களை அம்மாநில காவல்துறை தடுத்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. இரு மாநிலத்துக்கும் சுமுக நிலை இருக்க வேண்டும்.
மத்திய அரசின் உத்தரவுப்படி புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை தொடங்கப்பட்டு விட்டது. ஜிப்மரிலும் புறநோயாளிகள் சிகிச்சையைத் தொடங்க வேண்டும் என்று அதன் இயக்குநருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதிக்கு நான் சென்றேன்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஒரு பகுதியில் ஒருவர் பாதிக்கப்பட்டால், அதற்காக அந்தப் பகுதியில் உள்ள 5,000 நபர்களைத் தனிமைப்படுத்திவிட்டு, அவர்களுக்குப் பொருளாதார முடக்கத்தை ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
மாநில அரசுகளுக்கு நிலைமை தெரியும். மாநில அரசுகள் இருக்கின்ற சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுப்பார்கள். எந்தப் பகுதியில் குடியிருக்கின்றனரோ அந்தப் பகுதியை மட்டும் தனிமைப்படுத்தினால் போதும். 500 மீட்டர் இடைவெளி என்று சொல்லி மிகச்சிறிய மாநிலமான புதுச்சேரியை பல இடங்களில் தனிமைப்படுத்தினால் மாநிலமே ஸ்தம்பித்துவிடும்.
இது சம்பந்தமாக நான் பிரதமருக்குக் கடிதம் எழுதி, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்பது மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டுமே தவிர மத்தியில் உள்ள அதிகாரிகள் நிர்ணயிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநிலங்களைப் பொறுத்தவரையில் அந்த மக்களின் வாழ்வாதார நிலை தெரியும்.
அவர்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதும் தெரியும். ஆகவே, அதன் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன். வெகு விரைவில் அதற்கு நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்ப்பதாக அப்பகுதி மக்களிடம் கூறினேன்.
புதுச்சேரியில் கரோனாவைத் தடுக்க அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். ஆனாலும் பொதுமக்களுள் சிலர் ஒத்துழைப்பு தருவதில்லை. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது.
புதுச்சேரி மாநிலம் பாரம்பரியமாக மதுக்கடைகள் இருக்கும் மாநிலம். அண்டை மாநிலத்தின் முடிவைப் பொறுத்து புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கலாம் என்று ஏற்கெனவே எங்கள் அமைச்சரவையில் முடிவு எடுத்திருந்தோம்.
இன்று முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே மதுக்கடைகளைத் திறந்தால்தான் மாநில வருவாயை ஈட்ட முடியும் எனும் நிலையில் மதுக்கடை உரிமையாளர்களை அழைத்துப் பேசி, புதுச்சேரியில் எப்போது மதுக்கடைகள் திறப்பது என்பது குறித்து வெகுவிரைவில் முடிவு எடுப்போம். இதற்காக அமைச்சரவையில் கூடி முடிவை அறிவிப்போம்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT