Published : 20 Aug 2015 09:37 AM
Last Updated : 20 Aug 2015 09:37 AM
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை யில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி சிதிலமடைந்து வருவதால் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பழமை மாறாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது.
இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை அருங்காட்சியகம் சென்னை கோட்டை வளாகத்தில் உள்ளது. இதன் இரண்டாம் தளத்தின் குளிரூட்டப்பட்ட அறைக்குள் 8 அடி அகலம் 12 அடி நீளம் கொண்ட தேசியக் கொடி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. 1947 ஆகஸ்ட் 15-ல் அதிகாலை 5.30 மணிக்கு சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன்முதலாக ஏற்றப்பட்ட கொடி இதுதான்.
குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் சேர்ந்து உருவாக்கியதாகச் சொல்லப்படும் இந்தக் கொடி, முழுக்க முழுக்கபட்டுத் துணியால் நெய்யப்பட்டது. அன்றைய தொழில்நுட்பத்தில் இதை நெசவு செய்வதற்கு குறைந்தது இரண்டு மாதங்கள் பிடித்திருக்கும். ஆனால், ஒரு மாதத்துக்கும் குறைவான நாட்களில் இந்தக் கொடியை உருவாக்கித் தந்திருக்கிறது அந்தக் குடும்பம்.
டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட நாட்டின் முக்கிய இடங்களில் முதன்முதலாக ஏற்றப்பட்ட தேசியக் கொடிகள் எங்கிருக்கின்றன என்ற விவரம் அரசிடம் இல்லை. ‘‘அந்தக் கொடிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாப்போம்’’ என்று சொன்னார் முந்தைய காங்கிரஸ் அரசின் கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி.
சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள தேசியக் கொடியும் 2 ஆண்டு களுக்கு முன்புவரை எங்கோ ஒரு மூலையில்தான் இருந்தது. 2013 ஜனவரி 26-ல்தான் பொதுமக்கள் பார்வைக்காக மரப்பேழையில் வைக்கப்பட்டது. இந்தக் கொடி சிதிலமடைந்து வருவதால் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய இந்திய தொல்லியல் ஆய் வுத்துறை கோட்டை அருங்காட் சியகத்தின் துணைக் கண்காணிப்பாளர் கு.மூர்த்தீஸ்வரி. ‘‘இங்கு வரும் பார்வையாளர்கள், ‘வெள்ளையர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை மட்டுமே வைத்திருக்கிறீர்கள். நமக்கான அடையாளங்கள் ஏதுமில்லையா?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அது நியாயமான கேள்வியாக இருந்ததால் அருங்காட்சியக ஆவணப் பதிவேடுகளைப் புரட்டினோம். அப்போதுதான், கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி இங்கிருப்பது தெரியவந்தது.
அதைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்தோம். கொடி நெய்யப்பட்டு 60 வருடங்களுக்கு மேலாகிவிட்டதால் பல இடங்களில் துணி நைந்துவிட்டது.
இருப்பினும் கொடியை காட்சிப்படுத்துவதற்காகவே சிறப்பு மரப்பெட்டி ஒன்றை உருவாக்கினோம். பெட்டியின் அடிப் பகுதியில் தேசியக் கொடி போலவே மூவர்ணத்திலான பட்டுத் துணியை இரண்டு அடுக்காக விரித்து அதன் மீது அசல் கொடியை விரித்தோம். மரப்பெட்டியின் மேல் பகுதியைக் கண்ணாடி போன்ற ’அக்ரலிக் ஷீட்’மூலம் மூடினோம்.
கொடியின் வெண்மைப் பகுதி ரொம்பவே சிதிலமடைந்துவிட்டது. பழமை மாறாமல் அதை பாதுகாப்பது தொடர்பாக எங்கள் துறையின் அறிவியல்கூட வல்லுநர்கள் அண்மையில் வந்து பார்வையிட்டார்கள்.
சிதிலமடைந்த பகுதிகளை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மெல்லிய ’சிந்தட்டிக்’ இழைகள் கொண்டு இணைக்க முடியும் என்று அவர்கள் கூறி இருப்பதால், வரலாற்றுப் பொக்கிஷமான இந்தக் கொடியை பழமை மாறாமல் பாதுகாக்க விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’’ என்று சொன்னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT