Published : 07 May 2020 04:42 PM
Last Updated : 07 May 2020 04:42 PM
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது வரம்பை அதிகரித்துள்ள அரசாணையை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மே 7) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர், பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை 58-ல் இருந்து 59 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது எவ்விதத்திலும் பொருத்தமானது அல்ல.
இந்த நடவடிக்கையின் மூலமும், ஏற்கெனவே அவர்களுடைய அகவிலைப்படி முடக்கம் உள்ளிட்ட ஏற்பாடுகளின் மூலமும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு மிச்சப்படுத்துகிறது.
மத்திய அரசிடம் பல்வேறு வகையினங்களில் மாநிலத்துக்கு வர வேண்டிய தொகையையும், நிவாரண நிதியையும் போராடிப் பெறுகிற துணிச்சல் அற்ற அரசாக, மாநில உரிமைகளை காவு கொடுக்கும் அரசாக, ஊழியர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் மீதே கைவைக்கும் அரசாக மீண்டும் மீண்டும் அம்பலப்பட்டு நிற்கிறது.
இந்த நடவடிக்கையின் மூலம் புதிய நியமனங்கள் தடுக்கப்படும். வேலைவாய்ப்பு மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் சூழலில் இந்த முடிவு தமிழக இளைஞர்களின் இளம் பெண்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும்.
34 வயதாகியும் அரசு வேலைக்கான கனவோடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் லட்சக்கணக்கானவர்கள் கனவுகளைப் பொய்ப்பிக்கும்.
நிரந்தர வேலை வாய்ப்புகளைக் குறைத்து அரசாணை எண் 56-ன் மூலம் வேலைகள் அவுட்சோர்சிங் செய்யப்படுவதும், ஏராளமான ஊழியர்கள் தொகுப்பூதியம், மதிப்பூதியம் அடிப்படையிலேயே பயன்படுத்தப்படுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆபத்தான சூழலை இது மேலும் சிக்கலாக்கும்.
இதனால், பதவி உயர்வுகளும் தள்ளிப் போகும். அடுத்த ஆண்டு ஓய்வு பெறும்போது ஆயிரக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியருக்கு ஓய்வூதியப் பலன்களை அளிக்க அரசிடம் திட்டம் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. ஓய்வூதியப் பலன்களே ஒட்டுமொத்தமாக கேள்விக்குள்ளாகும் அபாயமும் இதில் தெரிகிறது.
இந்தப் பின்னணியில் அரசின் மேற்கண்ட உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதோடு, அந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT