Published : 07 May 2020 02:02 PM
Last Updated : 07 May 2020 02:02 PM
மதுரையில் சமூக விலகலைப் பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை மதுப்பிரியர்கள் வாங்கிச் சென்றனர். பைக்கரா பகுதியில் கடையைத் திறக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. ஊரடங்கையொட்டி அனைத்து கடைகளும் மூடப்பட்டன. கடந்த 40 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது.
இதன்படி, இன்று கடைகள் திறக்கப்பட்டன. மதுரையை இரண்டாக பிரித்து, மதுரை வடக்கு பகுதியிலுள்ள 113 கடைகளில் நோய் தடுப்புக்காக தடை செய்த பகுதியிலுள்ள கடைகள் தவிர, எஞ்சிய 99 கடைகளும், மதுரை தெற்கில் 152-க்கு 120 கடைகளும் செயல்பட்டன.
ஒவ்வொரு கடையிலும் காலை 10 மணிக்கு முன்னதாக மதுப்பிரியர்கள் வரத் தொடங்கினார். கடைகள் திறந்தபின், நீண்ட வரிசையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி மதுபானங்களை வாங்கிச் சென்றனர். 50 வயது மேல் காலை 10-1 மணி, 40-50 வயதுக்குள் 1 முதல் 3 மணி, 40 வயதுக்கு கீழ் 3-5 மணி வரை என, பிரித்து மதுபானங் கள் விற்கப்படுகின்றன.
சமூக விலகலுக்கான வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டு இருந்தன. கூட்டத்தைக் கட்டுப்படுத்த கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.
பெரும்பாலான இடங்களில் மதுபாட்டில் வாங்குமிடம் அருகில் முண்டியடித்து செல்வதைத் தடுக்க, குறுக்கே கம்புகள் கட்டி, கீழே குனிந்து செல்லும் வகை யில் ஏற்பாடு செய்து இருந்தனர். மதுபானம் வாங்குவோருக்கு ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டது. ஒருவர் ஒரு புல் மது பாட்டிலுக்கு மேல் வாங்க அனுமதியில்லை. அனைத்து கடை களிலும் போலீஸார், ஊர்காவல் படையினர், தன்னார்வலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.
சமூக விலகல் உள்ளிட்ட விதிகளை பின்பற்ற போலீஸார் மைக் மூலம் எச்சரிக்கை விடுத்தனர். வரிசையில் நின்ற மதுப்பிரியர்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை சானிடைசர் வழங்கப்பட்டது.
முகக்கவசம் அணியாத வர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை.அனைத்துகடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. சில கடைகளில் மதுப்பிரியர்களுக்கென சேர்கள் போடப்பட்டிருந்தது.
சில கடைகளில் வயது கட்டுப்பாடு நேர முறையில் மதுபானம் விற்கவில்லை. அனைத்து வயதினரும் வாங்கினர். பறக்கும்படை போலீஸார் ரோந்து சுற்றி, கடைக்கு அருகில் கூட்டம் கூடுவதை எச்சரித்து அனுப்பினர்.
எல்லாக் கடையிலும் மாலை வரை சுமார் 200க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கினர்.
இருப்பினும், ஊரடங்கின்போது, மதுப்பிரியர்களிடம் பெரியளவில் பணம் இருக்காது என்ற போதிலும், பெரும்பாலான கடைகளில் ரூ.2000, 500 நோட்டுகளை தாராளமாகக் கொடுத்து மதுபானங்கள் வாங்கியதைக் காண முடிந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் கூறினர்.
மேலும், அவர்கள் கூறுகையில், ‘‘ ஏற்கெனவே இருப்பு இருந்த சரக்குகள் மட்டுமே விற்கப்படுகிறது. ஒவ்வொரு கடையிலும் இவ்வளவு விற்கவேண்டும் என்ற இலக்கு எதுவுமில்லை.
இருப்பிலுள்ள சரக்கு விற்றபின், தேவையான மதுபானங்கள் ஆர்டர் போட்டு கொள்முதல் செய்யப்படும். மதுப்பிரியர்களே அமைதியான முறையில் விதிமுறைகளை பின்பற்றி மதுபானங்களை வாங்கினர்,’’ என்றனர்.
கடையை திறக்க பெண்கள் எதிர்ப்பு:
மதுரை பைக்கரா பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை காலையில் திறக்கச் சென்றபோது, அப்பகுதி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படக்கூடாது என எதிர்த்தனர்.
ஆட்சியரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுங்கள் என, போலீஸார் எச்சரித்து சமரம் செய்தனர். இதைத் தொடர்ந்து கலைந்து சென்றார். மேலும், செல்லூர் மற்றும் மாவட்டத்தில் ஒருசில இடத்தில் கடைகளைத் திறக்க எதிர்ப்பு கிளம்பியது என, போலீஸார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT