Published : 07 May 2020 12:52 PM
Last Updated : 07 May 2020 12:52 PM
கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். சளி, காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு வரவேண்டும். தடுப்பு நடவடிக்கைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று சென்னை கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று ஜெ.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
“அண்ணா நகர், தண்டையார் பேட்டை, வளசரவாக்கம் பகுதிகளில் ஒரே ஒரு வார்டில் மிக அதிகமான தொற்று நோயாளிகள் உள்ளனர். தட்டாங்குளம் அங்கு ஒரே தெருவில் 96 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் அங்கு புதிய தொற்று வருவது குறைந்துவிட்டது. இது ஒரு நல்ல விஷயம். இது ஒருவகையான ட்ரெண்ட். இதேபோன்று வேறு சில புது ஏரியாக்களுக்கும் வரலாம்.
தமிழகத்தில் கரோனா வைரஸால் மிகக்குறைவாக இறப்பு விகிதம் உள்ளது. சென்னையில் ஒரு கோடி மக்கள்தொகை இருந்தாலும், இறப்பு விகிதம் மிகக்குறைவாக 0.9 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க கவனம் செலுத்தச் சொல்லியிருக்கிறோம்.
குறிப்பாக வயதானவர்கள், நீண்டகால நோய் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கிட்னி அறுவை சிகிச்சை, கேன்சர் நோயாளிகள் ஆகியோரைக் குடும்பத்தில் உள்ளவர்கள் அதிக கவனம் செலுத்தி மற்றவர்களுடன் தொடர்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் வைக்கிறோம்.
இரண்டாவது வேண்டுகோள். கடந்த 2 இறப்புகளைப் பார்த்தால் அவர்கள் சரியாக மருந்து எடுத்துக்கொள்ளாதது. சர்க்கரை நோய் இருந்து சரியாக மருந்து எடுத்துக்கொள்ளாததால் சிக்கலாகி உயிரிழப்பு வரை சென்றது. மூன்று நான்கு நாட்கள் சளி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும். இதை மிக முக்கியமான வேண்டுகோளாக வைக்கிறோம்.
சூளை பகுதியைப் பார்த்தால் மிகக் கவனமாகக் கண்காணித்ததில் கண்காணிப்புப் பகுதியில் ஏடிஎம், வங்கி செயல்படக்கூடாது என்று அரசாணை இருந்தும் செயல்பட்டது. அதைத் தடுத்துள்ளோம். மொபைல் ஏடிஎம் செல்ல முயற்சி எடுத்து வருகிறோம். ஆட்டோக்கள் நோய்க் கண்காணிப்புப் பகுதிகளில் செல்லக்கூடாது என்றும் கூறியுள்ளோம்.
தொடர்ச்சியாக கண்காணிப்புப் பகுதியில் உள்ள நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்கும் வேலையைச் சரியாகச் செய்வதற்கு முயற்சி எடுத்து வருகிறோம். அதேபோன்று நோயாளிகள் இருக்கும் ஏரியாக்களில் அதிக அளவில் பார்வையாளர்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கும் தொற்று வரும் ஆபத்து உள்ளது. அதையும் கண்காணிக்கக் கூறியுள்ளோம்.
மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், ஊடகத்தினருக்கு பொதுமக்கள் குறிப்பாக கண்காணிப்புப் பகுதியில் வசிக்கும் மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். கோவிட் ஒரு நுண்கிருமி. அதைப் பரவாமல் தடுக்கத்தான் முயற்சி எடுத்து வருகிறோம். அதனால் நாம் அனைவரும் ஏற்கெனவே கூறியுள்ள விழிப்புணர்வைத் தொடர வேண்டும்.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நோய்த் தொற்று குறைந்த 500க்கும் மேற்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களை லயோலா, டிஜி வைஷ்ணவா, சென்னை வர்த்தக மையத்தில் வைத்துள்ளோம். அவர்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியதில்லை என்பதுதான் அவர்களுக்கான செய்தி.
தமிழ்நாட்டு அரசு மருத்துவமனையில் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன. முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் அனைத்தும் நடந்து வருகின்றன. நோயில்லாதவர்கள் மருத்துவர்களின் வேலைப்பளுவைக் குறைப்பதற்காக வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளோமே தவிர வேறு நோக்கம் இல்லை.
தற்போது வெளிமாநிலம், வெளிநாட்டிலிருந்து வருபவர்களைக் கண்காணித்து அவர்களைக் கண்காணிப்பில் வைப்பது போன்றவற்றைக் கவனித்து வருகிறோம். யாரும் பயப்பட வேண்டாம். வழக்கமான சிகிச்சை எடுத்துக்கொள்ள நோயாளிகள் தயங்கக்கூடாது. சளி, தொடர் இருமல் உள்ளவர்கள் மருத்துவமனைக்குச் சென்று கட்டாயம் மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஹெல்த் பார்வையில் சரியான ஹெர்பல் உணவை லயோலாவிலும் அளிக்கத் தொடங்கிவிட்டோம். மத்திய அரசு கொடுத்த அனைத்து விதிகளையும் அமல்படுத்தவில்லை. சென்னையின் நிலைக்கு ஏற்பச் செயல்படுத்தியுள்ளோம். வாழ்க்கைச் சூழ்நிலையை தற்போதுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும். உலக சுகாதார நிறுவனம் மத்திய மாநில அரசுகளின் அறிவுரையை ஏற்றுச் செயல்பட வேண்டும்.
கோயம்பேடு சம்பந்தப்பட்ட 6,900 வியாபாரிகளையும் உடனடியாகக் கண்டறிந்து கண்காணிப்புப் பகுதிகளில் கொண்டுசென்று மாவட்ட வாரியாக ஆட்சியர் மூலம் தனிமைப்படுத்தி வைத்துவிட்டோம். சென்னையில் உள்ளவர்களையும் கண்காணித்து வருகிறோம்.
கோயம்பேட்டிலும் வெளியிலிருந்து உள்ளே தொற்று வந்துள்ளது. வூஹான் மாதிரி மார்க்கெட்டிலிருந்து வரவில்லை. நாளை வேறு காரணத்தினால் நோய் பரவினால் அதைக் குற்றம் சொல்வோம். இதில் நாம் கவனமாக இருப்பது அரசு சொல்லும் எச்சரிக்கைகளைப் பின்பற்றுவது, தேவையில்லாமல் வெளியில் வருவதை பொதுமக்கள் கட்டாயம் தவிர்க்கவேண்டும்”.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT