Published : 07 May 2020 12:29 PM
Last Updated : 07 May 2020 12:29 PM
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மதுப் பிரியர்களுக்கு மது விற்பதில் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய முடியாத அளவுக்கு வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகள் முட்டுக்கட்டை போடத் தொடங்கியுள்ளனர்.
பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஒன்றரை மாதங்களாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் குடும்ப வன்முறைகளும் வெகுவாகக் குறைந்திருந்தன. மதுப்பிரியர்களுக்கும் தங்கள் குடும்பத்தினரோடு அதிக நேரத்தைச் செலவு செய்யவும், அதன்மூலம் தங்களைப் புத்தாக்கம் செய்துகொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் சிலர் மனம் திருந்தினர். ஆனால், இன்னும் சிலரோ, யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சுவது, கூடுதல் விலை கொடுத்து கள்ளச் சந்தையில் மது வாங்கிக் குடிப்பது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடவும் தொடங்கினார்கள்.
இருப்பினும் மதுப்பிரியர்களின் மையமாக இருந்த ‘டாஸ்மாக்’ மூடப்பட்டதால் பலரும் திருந்தும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்நிலையில்தான் நிபந்தனைகளுடன் மது விற்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. நேரடியாகச் சென்று மது வாங்குபவர்கள் ஆதார் அட்டை கொண்டுவர வேண்டியதைக் கட்டாயமாக்கியுள்ளது அரசு.
ஆனால், சதாசர்வ நேரமும் குடியிலேயே மூழ்கி இருக்கும் ‘குடி’மகன்களில் சிலர் ஆதார் அட்டையே இதுவரை எடுக்கவில்லை. அப்படியே எடுத்திருந்தாலும் அவர்களின் ஆதார் அட்டையை அவர்களது மனைவிகள் எடுத்து மறைத்துவைக்கத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த கிராமத்து இல்லத்தரசி ஒருவர் கூறும்போது, ''அரசு அறிவித்த ஊரடங்கு பலவகையிலும் சிரமத்தைக் கொடுத்தாலும் டாஸ்மாக் கடையைத் திறக்காதது பெரிய நிம்மதியாக இருந்தது. வட்டிக்கடைகள் இல்லாததாலும், டாஸ்மாக் கடை திறக்காததாலும் கை, காதில் மிஞ்சியிருந்த பொட்டு, பொடி தங்கமேனும் தப்பியது. குடிக்கு அடிமையான பலர் ரேஷன் அட்டையை அடகுவைத்துக் குடிக்கவும் துணிந்துவிட்டார்கள். அதனால் ஏற்கெனவே ரேஷன் கார்டு, ஏடிஎம் கார்டு ஆகியவற்றை ஒளித்துவைத்து வந்தோம். இப்போது ஆதார் அட்டையையும் மறைத்து வைத்திருக்கிறோம். என்ன செய்ய... இதெல்லாம் எங்க தலையெழுத்து'' என்றார்.
அரசு மதுக்கடைகளை மீண்டும் திறந்திருப்பது இன்னும் என்னென்ன சங்கடங்களைக் கொண்டு வந்து சேர்க்கப் போகிறதோ தெரியவில்லை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment