Published : 07 May 2020 12:09 PM
Last Updated : 07 May 2020 12:09 PM
பொது மக்களுக்கு முகக்கவசம் குறைந்த விலையில் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முதல் முறையாக தானியங்கி முகக்கவசம் விற்பனை இயந்திரம் (Mask Vending Mechine) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வெளியே செல்லும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து மக்களுக்கு குறைந்த விலையில் தரமான முகக்கவசம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் தானியங்கி முகக்கவசம் விற்பனை இயந்திரத்தை தூத்துக்குடி மாநகராட்சி முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது.
முதற்கட்டமாக மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை அருகேயுள்ள ராஜாஜி பூங்கா பகுதி ஆகிய இரு இடங்களில் தானியங்கி முகக்கவசம் விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்களை மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் இன்று காலை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். மாநகராட்சி நகர் நல அலுவலர் எஸ்.அருண்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இது குறித்து ஆணையர் ஜெயசீலன் கூறும்போது, இந்த இயந்திரத்தில் ரூ.5 காயினை போட்டால் ஒரு முகக்கவசம் வரும். இந்த இயந்திரத்தில் ஒரு நேரத்தில் 120 முகக்கவசங்கனை வைக்க முடியும். அவை தீர்ந்ததும் உடனடியாக மீண்டும் வைக்கப்படும்.
முகக்கவசங்கள் மகளிர் குழுக்களிடம் இருந்து வாங்கப்படும். முதல் கட்டமாக 2 இடங்களில் இந்த இயந்திம் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் வரவேற்பை பார்த்து மேலும் இடங்களில் வைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
தானியங்கி இயந்திரத்தில் முதல் நாளிலேயே ஏராளமான மக்கள் ஆர்வமுடன் 5 ரூபாய் காயினை போட்டு முகக்கவசங்களை எடுத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT