Published : 07 May 2020 11:50 AM
Last Updated : 07 May 2020 11:50 AM
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று காலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுபாட்டில்களை வாங்க மதுப்பிரியர்கள் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மதுக்கடைகள் திறப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும், சாலை மறியலும் நடைபெற்றது.
கரோனா பரவலைத் தடுக்க தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மார்ச் 25-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 170 மதுக்கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மதுக்கடைகளில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதைத் தடுப்பதற்காக, கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் வல்லம், சாலியமங்கலம், திருநாகேசுவரம் உள்பட 6 இடங்களில் உள்ள திருமண மண்டபங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இந்நிலையில், கரோனா நோய் தடுப்புப் பகுதிகளைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் மதுக்கடைகளை சில விதிமுறைகளுடன் இன்று (மே 7) முதல் திறக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம், திருவையாறு பேரூராட்சி, பாபநாசம் பேரூராட்சி, வல்லம் பேரூராட்சி, அம்மாபேட்டை, கும்பகோணம் நகராட்சி, ஒரத்தநாடு வட்டத்துக்கு உட்பட்ட நெய்வாசல் ஊராட்சி, சேதுபாவாசத்திரம், தஞ்சாவூர் கே.எம்.எஸ்.நகர், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட திருவைக்காவூர் அதியம்பநல்லூர் ஆகியவை கரோனா நோய் தடுப்புப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவுள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக உள்ளன.
இதையடுத்து, இன்று காலை மதுக்கடைகள் முன்பாக தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்படி, தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க காலை 7 மணி முதல் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முதலில் அவர்களது ஆதார் எண்களும், மொபைல் எண்களும் குறிக்கப்பட்டு அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. வரிசையில் நிற்க தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.
அவசர அவசரமாக திறக்கப்பட்ட மதுக்கடைகள்
தஞ்சாவூர் மாநகரில் உள்ள 17 மதுக்கடைகள் திறக்கப்படாது என புதன்கிழமை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்த நிலையில், இன்று அதிகாலை அந்தக் கடைகளுக்கு மதுபாட்டில்களை டாஸ்மாக் நிர்வாகம் கொண்டு வந்து காலை 10 மணிக்கு மது விற்பனையைத் தொடங்கினர். இந்தக் கடைகளைத் திறக்க முன்னேற்பாடுகளான தடுப்புக் கட்டைகள் ஏதும் அமைக்காததால் அங்கு தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாமல் மதுப்பிரியர்கள் நெருங்கி நின்று கொண்டிருந்தனர்.
சாலை மறியல்
தஞ்சாவூர் மாநகரம் பூக்காரத்தெருவில் இன்று மதுக்கடை திறக்கப்பட்டதைக் கண்டித்து அப்பகுதியில் உள்ள பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பூச்சந்தை அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போலீஸார் அங்கு சென்று பொதுமக்களைக் கலைந்து செல்லுமாறு வற்புறுத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு மதுக்கடைகளைத் திறப்பதைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஒரத்தநாடு, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் அக்கட்சியிர் தங்களது வீடுகள் முன்பாகவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மதுக்கடைகளைத் திறந்த தமிழக அரசையும், கரோனா நிவாரண நிதியை மத்திய அரசு தமிழக அரசுக்கு அதிக அளவு ஒதுக்கீடு செய்யக் கோரி பதாகைகளுடன் மாவட்டம் முழுவதிலும், திமுக சார்பில் கும்பகோணத்தில் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் தலைமையில் அக்கட்சியினரும் கருப்புச் சட்டை அணிந்து பதாகைகள் ஏந்தி தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT