Published : 07 May 2020 11:32 AM
Last Updated : 07 May 2020 11:32 AM

கரோனா தடுப்பு: மண்டலவாரியான திட்டங்கள், சிறப்பு அதிகாரிகள் தேவை; ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

கரோனா தடுப்புப் பணிகளை எவ்வளவு சிறப்பாகச் செய்தாலும், மதுக்கடைகள் திறக்கப்பட்டால், அத்தனையும் பயனின்றிப் போய்விடும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 7) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலில் நேற்று புதிய உச்சம் எட்டப்பட்டிருக்கிறது. சென்னையில் 324 பேர் உட்பட தமிழ்நாடு முழுவதும் 771 பேர் நேற்று மட்டும் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். புதிய நோய்த்தொற்றுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

சென்னையில் ஏற்படும் புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை முதலில் ஒற்றை இலக்கங்களிலும், பின்னர் இரட்டை இலக்கங்களிலும் இருந்த நிலை மாறி, கடந்த வாரத்தில் நூற்றுக்கும் அதிகமாக உயர்ந்தது. அந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் பயனளிக்காமல், கடந்த சில நாட்களாக புதிய தொற்றுகள் இருநூறுகளைக் கடந்து, நேற்று முந்நூறைத் தாண்டி 324 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அதேபோல், மாநில அளவிலான தொற்றுகளின் எண்ணிக்கை முந்நூறுகளையும், பின்னர் ஐந்நூறுகளையும் கடந்து இப்போது எழுநூறைத் தாண்டியுள்ளது. சென்னை மற்றும் வட மாவட்டங்களில்தான் புதிய தொற்றுகள் அதிகமாக நிகழ்ந்து வருகின்றன. அதற்கான முதன்மைக் காரணங்களில் குறிப்பிடத்தக்கது கோயம்பேடு சந்தையில் கட்டுப்பாடற்ற கூட்டத்தால் ஏற்பட்ட நோய்ப்பரவல் என்பதில் ஐயமில்லை.

கோயம்பேடு சந்தையிலிருந்து உருவான நோய்ப்பரவல் சுமார் 10 மாவட்டங்களில் கடுமையாக இருக்கும் நிலையில், மீதமுள்ள மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் இருப்பது மனநிறைவளிக்கிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் குணமடைந்துவிட்ட நிலையில், அந்த இரு மாவட்டங்களும் இப்போது கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களாக உருவெடுத்துள்ளன.

நாகையில் ஒருவர், தூத்துக்குடி, திருப்பூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தலா மூவர், கரூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா நால்வர், திருவாரூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 6 பேர், நெல்லை மாவட்டத்தில் எழுவர், தேனி மாவட்டத்தில் 8 பேர், ராமநாதபுரத்தில் 9 பேர், திருச்சி மாவட்டத்தில் 10 பேர் என தமிழகத்தின் 19 மாவட்டங்களில், அதாவது பாதிக்கும் அதிகமான மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10க்கும் குறைவாகவே உள்ளது.

இந்த மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாகவே மருத்துவமனைகளில் உள்ளோர் எண்ணிக்கை 78 பேர்தான் என்பது ஆறுதலையும், கரோனா நோய்த்தடுப்பு முயற்சிகள் வெற்றிகரமாக முன்னேறுகின்றன என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது.

ஒருசில மாவட்டங்களில் கரோனா வைரஸ் தாக்குதலின் எண்ணிக்கை மிக அதிகமாகவும், வேறு சில மாவட்டங்களில் மிகவும் குறைவாகவும் இருக்கும் நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே அணுகுமுறையை கடைப்பிடிக்கத் தேவையில்லை. எந்தெந்த மாவட்டங்களில் நோய்ப்பரவல் வேகம் அதிகமாக உள்ளதோ, அந்த மாவட்டங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

உதாரணமாக, கடலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 26 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், கோயம்பேட்டில் ஏற்பட்ட பரவல் மூலம் 298 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், சென்னையில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 906 பேர் மட்டுமே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கோயம்பேடு தொற்று கண்டறியப்பட்ட கடந்த 6 நாட்களில் மட்டும் 1,422 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களையும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமடையாதவர்களையும் சேர்த்து மொத்தம் 1,975 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் 216 பேர், விழுப்புரம் மாவட்டத்தில் 133 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 93 பேர் என முதல் 5 மாவட்டங்களில் மட்டும் 2,715 பேர் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக மருத்துவமனைகளில் உள்ள 3,275 பேரில் இவர்களின் அளவு மட்டும் 83% ஆகும்.

அடுத்த நிலையில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய மாவட்டங்களையும் கணக்கில் கொண்டால், அம்மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 3,018 பேர், அதாவது 93 விழுக்காட்டினர் சிகிச்சை பெறுகின்றனர்.

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மேற்கண்ட 10 மாவட்டங்களில் தான் நோய்த்தடுப்புப் பணிகளில் கூடுதல் கவனமும், தீவிரமும் காட்டப்பட வேண்டும். இவற்றில் சென்னை மாவட்டத்தில் மட்டும் கரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கான சிறப்பு பொறுப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதேபோல், கடலூர், விழுப்புரம், அரியலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்குத் திறமையான, சம்பந்தப்பட்ட இடங்களில் கடந்த காலங்களில் பணியாற்றி அப்பகுதிகளின் சமூக கலாச்சாரங்களை அறிந்த மூத்த அதிகாரிகளை கரோனா பரவல் தடுப்பு சிறப்பு அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவற்றுக்கெல்லாம் மேலாக தமிழக அரசு செய்ய வேண்டிய மிகப்பெரிய பணி மதுக்கடைகள் திறக்கப்படாமல் உறுதி செய்வது தான். நோய்ப்பரவலைத் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எவ்வளவு சிறப்பாகச் செய்தாலும் கூட, மதுக்கடைகள் திறக்கப்பட்டால், அத்தனையும் பயனின்றி போய்விடும்.

எனவே, கரோனா நோய்ப்பரவல் தடுப்புப் பணிகள் வெற்றி பெறுவதற்கு வசதியாக தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கும் முடிவைக் கைவிட வேண்டும்; திறக்கப்பட்ட கடைகளை உடனே மூட வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x