Published : 07 May 2020 10:10 AM
Last Updated : 07 May 2020 10:10 AM
தினமும் 1.50 லட்சம் பேருக்கு 3 வேளை உணவளித்து, அயராமல் சேவை புரிந்து வருகிறது கோவையைச் சேர்ந்த நல்லறம் அறக்கட்டளை.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. அன்றாடம் வேலைக்குச் சென்று கூலி பெற்று அதன் மூலம் தங்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வந்த கோவையைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கியதால், உணவின்றித் தவித்தனர்.
இதையறிந்து கோவை மாவட்ட நிர்வாகம், பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள் முன்வந்து ஏழை, எளிய மக்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கி வருகின்றன. அந்தவகையில் கோவையில் செயல்பட்டு வரும் 'நல்லறம்' அறக்கட்டளை நாள்தோறும் 1.50 லட்சம் பேருக்கு உணவளித்து வருகிறது.
இது குறித்து 'நல்லறம்' அறக்கட்டளைத் தலைவர் எஸ்.பி.அன்பரசு கூறியதாவது:
"கோவை மாவட்டத்தில் உணவின்றி யாரும் பசியால் தவிக்கக்கூடாது என்று என்ற உயரிய நோக்கில் கடந்த மார்ச் 24-ம் தேதி 300 பேருக்கு உணவு வழங்கத் தொடங்கிய இச்சேவையானது, இன்று நாள்தோறும் 1.50 லட்சம் பேருக்கு உணவளிக்கும் நிலையை எட்டியுள்ளது.
குனியமுத்தூர் பகுதியில் தொடங்கிய இச்சேவையானது பேரூர், தொண்டாமுத்தூர், க.க.சாவடி, புளியகுளம் உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள திருமண மண்டபங்களில் 300 சமையல் கலைஞர்களைக் கொண்டு விதவிதமான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 50 நாட்களைக் கடந்து எங்கள் சேவை தொடர்கிறது.
காலை மற்றும் இரவு நேரங்களில் சப்பாத்தி மற்றும் உப்புமா, மதிய உணவாக மல்லி சாதம், தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சைவ பிரியாணி வழங்குகிறோம்.
ஈச்சனாரி, போத்தனூர், மைல்கல், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், மதுக்கரை, இருகூர், நீலாம்பூர், காளப்பட்டி, துடியலூர், வடவள்ளி, தடாகம் சாலை என நகர் பகுதியிலிருந்து கிராமப் பகுதி வரை மக்களை நோக்கிச் சென்று உணவு வழங்கும் பணி நடைபெறுகிறது.
இப்பணியில் மாவட்டத்திலுள்ள 300 அரிமா மற்றும் ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் உணவு வழங்கும் பணியில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வருகின்றனர். தயாரிக்கும் உணவுகள் உடனுக்குடன் சூடாக சுவையாக உணவுப் பாத்திரங்களில் எடுத்துச் சென்று வழங்க ஆட்டோ, கார், டெம்போ, மினிடோர் வாகனம் என 350 வாகனங்கள் நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அரிசி, சர்க்கரை, கோதுமை, மிளகாய், பருப்பு, எண்ணெய், மிளகு, சீரகம், புளி, முட்டை, பால், காய்கறி உள்ளிட்ட பொருட்கள் உள்ளிட்ட 31 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, கோவை மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு நாள்தோறும் 500 குடும்பங்கள் வீதம் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT