Published : 06 May 2020 07:15 PM
Last Updated : 06 May 2020 07:15 PM

இந்து தமிழ் இணையதள செய்தி எதிரொலி: காப்பகத்திலிருந்து குழந்தைகளை அழைத்துவர எச்.ஐ.வியால் பாதித்த தாய்க்கு அனுமதி

காப்பகத்திலிருந்து என் குழந்தைகளை அழைத்துவர முடியவில்லையே; எச்.ஐ.வி பாதித்த தாயின் தவிப்பு’ எனும் தலைப்பில் நேற்று இந்து தமிழ்திசை இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

பொள்ளாச்சி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த, எச்.ஐ.வி பாதிப்புள்ள ஒரு பெண், கோவையில் உள்ள காப்பகத்தில் தங்கிப் படிக்கும் தனது மூன்று குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துவர முடியாமல் தவிப்பது குறித்து அதில் எழுதியிருந்தோம். கோவைக்குச் செல்ல, தனது கிராமத்திலிருந்து கேரளப் பகுதிக்குள் சென்று பிறகு தமிழகப் பகுதிக்கு வர வேண்டிய சூழலில் அந்தப் பெண் இருக்கிறார்.

இதற்காகப் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் அனுமதிக் கடிதம் வாங்கியிருந்தார். ஆனால், கோவைக்குச் செல்ல கேரளப் பகுதி வழியே செல்ல முயன்றபோது கேரள எல்லையில் உள்ள போலீஸார் அவரை அனுமதிக்கவில்லை. சுற்றுப்பாதையில் மூலம் நடந்துசெல்ல முயன்றபோது, அனுமதிக் கடிதம் காலாவதியாகி விட்டது என தமிழகப் போலீஸாரும் கைவிரித்துவிட்டனர்.

மீண்டும் அனுமதிக் கடிதம் கேட்டு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அந்த தாய் விண்ணப்பிக்க, ‘ஒருவருக்கு ஒரு முறைதான் அனுமதிக் கடிதம் தர முடியும்’ என அவர் திருப்பியனுப்பப்பட்டார். இப்படி அந்தத் தாய் கடந்த ஒரு மாத காலமாக அலைக்கழிக்கப்பட்டார். இதுகுறித்த செய்தி நமது இணையதளப் பக்கத்தில் வெளியானதும், நமக்குப் பேட்டியளித்திருந்த பழங்குடியினருக்கான செயல்பாட்டாளர் தன்ராஜூவிடம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் டாக்டர் வைத்தியநாதன் பேசியுள்ளார்.

அந்தப் பெண்ணிற்கு என்ன சிக்கல் என்பதைக் கேட்டறிந்ததுடன், அவருக்கு மீண்டும் அனுமதிக் கடிதம் வழங்கியிருக்கிறார். இதுகுறித்து நம்மிடம் பேசிய தன்ராஜ், “சார் ஆட்சியர் மட்டுமல்ல, செய்தியைப் படித்துவிட்டு கோவையிலிருந்து ஒரு வக்கீல், ஒரு மாஜிஸ்திரேட் ஆகியோரும் பேசினார்கள். அப்பெண்ணின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவருக்கு உதவ முன்வந்தார்கள். இன்று காலை அந்தப் பெண்ணைப் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் வரவழைத்திருந்தேன். சார் ஆட்சியர் கோவை சென்றிருந்த நிலையில் மதியம் 2.30 மணிக்குத் திரும்பிவந்ததும் உடனடியாக அனுமதிக் கடிதத்தை வழங்கிவிட்டார்.

குழந்தைகளை அழைத்து வர வாடகைக் கார் ஏற்பாடு செய்து அப்பெண்ணைக் கோவை காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன். குழந்தைகளுடன் அவர் திரும்பிவந்தவுடன் வேறு உதவிகள் தேவை என்றாலும் செய்துதர ஏற்பாடு செய்துள்ளேன்” என்றார்.

ஓர் ஏழைத் தாயின் கண்ணீருக்கு இரங்கி, அவருக்கு உதவி செய்த அனைவரையும் வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x