Last Updated : 06 May, 2020 03:08 PM

 

Published : 06 May 2020 03:08 PM
Last Updated : 06 May 2020 03:08 PM

மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமிக்கு தினமும் மூன்று வேளை ஷவர் குளியல், மருத்துவ பரிசோதனை‌; கையுரை, முகக்கவசம் அணிந்து உணவளிக்கும் பாகன்கள்

கத்திரி வெய்யிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி மூன்று முறை ஷவரில் குளிக்க வைக்கப்படுகிறது. மேலும் நோய் பரவலை தடுக்க மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுகிறது.

ஆன்மீக நகரமான புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது முதல் வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியின் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலும் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது.

இக்கோயில் யானையான லட்சுமி அருகில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் வைத்து பராமரிக்கப்படுகிறது. தற்போது கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கிறது. புதுச்சேரியிலும், பகல் நேரத்தில் அனல் காற்று வீசி வருகிறது.

இதனால் ஏற்படும் உஷ்ணத்தை தனிக்கும் பொருட்டு மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமிக்கு ஷவர் பாத்தில் தினமும் ஒருமுறை குளிக்க வைத்த நிலையில்,

தற்போது நாள் ஒன்றுக்கு மூன்று முறை குளிக்க வைக்கப்படுகிறது. இந்த ஷவர் குளியலின் போது லட்சுமி யானை குழந்தையை போன்று தண்ணீரில் உற்சாகமாக ஆட்டம் போடுகிறது.

அதோடு தினமும் அரிசி சாதம், 5 வித தானியங்களை கொண்ட உணவு, தர்பூசணி, கிர்ணி பழம் போன்றவை அளிக்கப்படுகின்றது. கரோனா அச்சம் காரணமாக யானைக்கு உணவு தயாரிப்பதற்கு முன் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும், கையுறை, முகக்கவசம் அணிந்து கொண்டு யானையை பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், யானை பாகன்கள் கையுரை, முகக்கவசம் போன்றவை அணிந்து கொண்டு யானை லட்மியை கவனித்து வருகின்றனர்.

கத்திரி வெயில் காலத்தில் யானைக்கு நோய் வராமல் தடுக்க கால்நடை மருத்துவர் தினமும் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மணக்குள விநாயகர் கோயில் நிர்வாக அதிகாரி வேங்கடேசன் கூறும்போது, ‘‘லட்சுமி யானை சாதாரன நாட்களில் தினமும் ஒரு வேளை குளிக்க வைக்கப்பட்டு உணவளிக்கப்படும்.

தற்போது கத்திரி வெயில் தொடங்கிய நாள் முதல் மூன்று வேளைகுளிக்க வைக்கப்படுகிறது. அரிசி சாதம், தானியங்கள், பழங்கள் போன்றவை கொடுக்கப்படுகிறது. அதோடு கரோனா அச்சம் காரணமாக பாகன்கள் கையுரை, முகக்கவசம் அணிந்து யானைக்கு உணவளிக்கின்றனர். மேலும் யானை தங்கும் இடம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. கால்நடை மருத்துவர் அவ்வப்போது யானைக்கு பரிசோதனையும் செய்து வருகின்றார். இதனால் யானை ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறது’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x