Published : 06 May 2020 02:37 PM
Last Updated : 06 May 2020 02:37 PM

திருமழிசை மார்க்கெட் திறக்க மேலும் 5 நாள் ஆகும் : காய்கறி தட்டுப்பாடு காரணமாக விலை கடுமையாக உயரும்: கோயம்பேடு வியாபாரிகள் சங்க தலைவர் பேட்டி

திருமழிசை மார்க்கெட் வசதி போதாது, ஆய்வு செய்தப்பின்னரே போவதா வேண்டாமா என முடிவெடுப்போம், இதனால் காய்கறி விற்பனை 10 தேதிக்கு மேலும் தள்ளி போகும் இதனால் காய்கறி விலை கடுமையாக உயரும் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் ராஜசேகர் அளித்த பேட்டி:

“கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வசதி திருமழிசையில் கிடையாது. கோயம்பேட்டில் உள்ளதைவிட அதிகமாக தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள், காய்கறிகள் மொத்தமாக தினமும் 5000 டன் வரும் எப்படி இறக்குவது. தற்போது தொழிலாளர்களும் இல்லை. கரோனா தொற்று சந்தேகத்தில் அவர்களை அடைத்து வைத்துள்ளார்கள். தொழிலாளர்களுக்கு சரியான உணவு தரவில்லை. அடைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

இருக்கிற தொழிலாளர்கள் வர பயப்படுகிறார்கள். இப்ப இருக்கிற தொழிலாளர்களும் ஊருக்கு போய் விட்டார்கள். திருமழிசையில் கடைகள் எதுவும் இதுவரை முழுமையாக அமைக்கப்படவில்லை. 150 சதுர அடி கடை எல்லாம் பத்தாது, அது தவிர மற்ற வசதிகள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை. எங்களை அழைத்துச் சென்று ஆய்வு செய்தபின்னர், கமிட்டி மெம்பர் கூடி முடிவெடுப்போம்.

தற்போதுள்ள நிலையில் கோயம்பேடு சந்தைக்கு 5 நாள் லீவு விட்டுள்ளோம். இதில் வசதி எதுவும் செய்து தரவில்லை என்றால் கடை திறப்பது இடைவெளி மேலும் அதிகரிக்கும். நாளை திருமழிசை சந்தைப்பகுதியை ஆய்வு செய்தப்பின் எங்கள் கமிட்டி கூடி முடிவெடுக்கும். அதில் திருமழிசை இடம் சரியில்லை என்றால் மேலும் கடை திறப்பது தள்ளிப்போகும்.

தற்போது கோயம்பேடு மார்க்கெட் 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு காய்கறி கிடைக்காமல் போகும் நிலை. விலைவாசி கடுமையாக உயரும்.

விவசாயிகளுக்கு விளைபொருளை விற்க முடியாமல் அழுகும் நிலை ஏற்படும். தற்போதுள்ள கோயம்பேடு இந்த மார்க்கெட்டையும் சுத்தம் செய்ய வேண்டும், உள்ளேயும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கவேண்டும் எனக்கேட்டுள்ளோம்.

கோயம்பேடு சந்தைக்கு 5 மாநிலங்களிலிருந்து காய்கறிகள் வருகிறது. இவ்வளவு லாக்டவுனிலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து தடையின்றி வந்ததால் பொதுமக்களுக்கு காய்கறி விலை ஏறாமல் முறையாக கிடைத்து வந்தது. எந்த காய்கறியாக இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்துதான் செல்லும். மார்க்கெட் பாதிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பாதிப்பு வரும்.

திருமழிசை வசதி பத்தாது. மிகக்குறைவான இடமே உள்ளது. 200 கடைகள் ஒரு கடைக்கு 200 டன் வரை சரக்கு வரும், 150 சதுர அடியில் இறக்க முடியுமா? காய்கறி வரத்து இல்லாமல் 5 நாள் விடுமுறை காரணமாக காய்கறி விலை ஏற்றம் கடுமையாக இருக்கும். இருக்கும் சரக்கு இன்று , நாளையுடன் விற்று விடுவார்கள் இதனால் காய்கறி விலை கடுமையாக உயரும்”.

இவ்வாறு ராஜசேகர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x