Published : 06 May 2020 02:13 PM
Last Updated : 06 May 2020 02:13 PM
சென்னையில் பணிபுரியும் மகாராஷ்டிரா இளம்பெண்ணின் தந்தை மரணம் அடைந்ததை அடுத்து, திமுக மகளிரணியினர் இருவர் உதவி செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா கடந்த மாதம் 28-ம் தேதி அலைபேசி வாயிலாக திமுக நாடாளுமன்றக் குழு துணைத்தலைவருமான கனிமொழியைத் தொடர்பு கொண்டார்.
அவர், ''மகாராஷ்டிரா மாநிலம், ரத்தினகிரி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பெண் யுவாந்தி அணில் சாகேத், சென்னையிலுள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருடைய தகப்பனார் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார், அவரை உடனடியாக ஊருக்கு அனுப்பி வைக்க உதவ வேண்டும்'' எனக் கேட்டுக் கொண்டார்.
யுவாந்தி பணிபுரியும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு பேசியதில், அப்பெண்ணோடு யாராவது ஒருவர் உடன் சென்றால், அனுப்பி வைக்கிறோம் எனப் பதிலளித்தனர். இந்த செய்தியை திமுக மகளிரணி வாட்ஸப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் கனிமொழி. இதைப் பார்த்த சோழிங்கநல்லூர் கிழக்குப்பகுதி திமுக மகளிரணி அமைப்பாளர் ந. கலைச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஈஸ்வரி மகள் பொன்மணி ஆகிய இருவரும் தந்தையை இழந்து நிற்கும் இளம்பெண்ணோடு மகாராஷ்டிரா சென்று, அவர்கள் இல்லத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டுத் திரும்ப முன் வந்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் பணிபுரியும் நிறுவனத்தில் ஊருக்குச் செல்வதற்கான அனுமதிக்கடிதம் 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குப் பெறப்பட்டது. அந்தப் பெண்ணோடு திமுக மகளிரணி நிர்வாகிகள் இருவரும் செல்வதற்கு முறையான அனுமதியை இரவு 11 மணிக்குப் பெற்று, அன்றைய தினம் நள்ளிரவு 2 மணிக்கு மகாராஷ்டிராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டர்.
நீண்ட பயணத்திற்குப் பிறகு மறுநாள் புதன்கிழமை இரவு 11.40 க்கு மூன்று பெண்களும் மகாராஷ்டிராவுக்குப் போய் சேர்ந்தனர். அந்தப் பெண்ணை அவருடைய வீட்டில் விட்டுவிட்டு மகளிரணி நிர்வாகிகள் இருவரும், மறுநாள் வியாழன் மாலை 6 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தனர்.
தந்தையை இழந்த இளம்பெண்ணுக்காக சுமார் 2,400 கிலோமீட்டர் பயணித்து, உடனிருந்து உதவிய மகளிரணியினருக்கு கனிமொழி பாராட்டு தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும், மகாராஷ்டிரா நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியாவும், கனிமொழிக்கும், திமுக மகளிரணியினருக்கும் நன்றி தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT