Published : 06 May 2020 09:29 AM
Last Updated : 06 May 2020 09:29 AM

கரோனா நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை எடுக்கலாம் என்ற திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது: தங்களால் இனி எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு பழனிசாமி அரசு வந்துவிட்டதா?- தினகரன் கேள்வி

தமிழகத்தில் சாதாரண கரோனா நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து டிடிவி தினகரன் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு திடீரென அறிவித்திருப்பது, ‘ஆட்சியாளர்கள் தங்களால் இனி எதுவும் செய்ய முடியாது என கைகளைத் தலைக்கு மேல் தூக்கிவிட்டார்களோ?’ என்ற பீதியை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உட்பட தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ‘மூன்றே நாட்களில் கொரோனாவை மொத்தமாக ஒழித்துவிடுவோம்’ என்று கடந்த மாதம் சொன்ன முதலமைச்சர் பழனிசாமி, தற்போது ‘ மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது; தெருக்கள் குறுகலாக உள்ளன; பொதுக்கழிவறைகளைப் பயன்படுத்துகிறார்கள்’ என நோய் பரவுவதற்கான காரணங்கள் பற்றிய ‘தமது புதிய கண்டுபிடிப்புகளை’ நேற்று வெளியிட்டுள்ளார்.

அதே நேரத்தில், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க 4000 படுக்கைகள் மருத்துவமனைகளில் தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளில் இடமில்லாத அளவுக்கு நோயாளிகள் நிரம்பி வழிவதாக வரும் செய்திகள் முதலமைச்சருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. மேலும் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கும், அவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், முதுநிலை

மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோருக்கும் சரியான நேரத்தில் உணவு உள்ளிட்டவற்றை வழங்குவதிலும் பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அரசு மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்க முழுமையாக குணமடையாத நோயாளிகளை ‘விருப்பப்பட்டால் வீட்டுக்குச் செல்லலாம்’ என்று கூறி அனுப்பிவைக்கும் பொறுப்பில்லாத செயல்களும் நடப்பதாக வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன.

இவை எல்லாவற்றையும் விட, ‘இனி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் தங்களை தாங்களே வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.அவர்களுக்கு அவரவர் வீடுகளில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படும்’ என சுகாதாரத்துறை செயலாளர் திடீரென அறிவித்திருப்பது மக்களிடம் பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்தபடியே அவர்கள் சாப்பிட வேண்டிய மருந்துகளையும் அவர் பட்டியலிட்டிருக்கிறார். அப்படியென்றால் இனிமேல் கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவருக்கும் மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாத மோசமான நிலைக்கு பழனிசாமி அரசு வந்துவிட்டதா?

நோயால் பாதிக்கப்படும் எல்லோரின் வீட்டிலும் அந்தளவுக்கு வசதிகள் இருக்குமா? அதிலும் சென்னை போன்ற பெருநகரத்தில் நோய் தொற்றுக்கு ஆளாவோர், முதலமைச்சர் பழனிசாமி முன்பு சொன்னபடி பணக்காரர்கள் இல்லையே? இட நெருக்கடியான சூழலில் தானே வாழ்ந்துவருகிறார்கள் ? வீட்டில் ஒரே படுக்கை அறை கொண்டோரும், அதுவும் இல்லாத நிலையிலுள்ள அடித்தட்டு மக்களும்தானே அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எப்படி வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற முடியும்? அப்படி அறிகுறியே இல்லாமல் பாதிக்கப்படுபவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது ? என்ற கேள்விகள் எழுகின்றன.

கொரோனா பேரிடரில், தொடக்கம் முதலே அலட்சியத்தாலும், அகங்காரத்தாலும் எல்லாவற்றையும் மூடி மறைத்தே பேசி வந்த ஆட்சியாளர்கள், இதன்பிறகாவது தங்களின் ‘ஈகோ’வை விட்டொழித்து, உண்மையைக் கூறி மக்களைக் காப்பாற்றத் தேவையானவற்றை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x