Published : 06 May 2020 08:14 AM
Last Updated : 06 May 2020 08:14 AM
தமிழக தலைமைச் செயலர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
கட்டுப்பாட்டு பகுதியில் வைரஸ்பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.குறிப்பாக தொற்று கண்டறியப்பட்டவர்கள் மற்றும் தொடர்புகளை வகைப்படுத்த வேண்டும். புவியியல்ரீதியிலான வரைபடத்தை உருவாக்கி அப்பகுதியில் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
மருத்துவ அவசரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தேவை தவிர மற்றபடி மக்கள் நடமாட்டத்தை தடை செய்ய வேண்டும். அங்கு வரும் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். வீடுவீடாக தொற்று பாதிப்பு பரிசோதனைக்கு சிறப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதைத் தடுக்க வேண்டும். ஒரு கிராம பஞ்சாயத்தில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டால்கூட அந்த கிராமத்தையும், ஓர் கிராம பஞ்சாயத்தின் எல்லையில் கண்டறியப்பட்டால், அருகில் உள்ள கிராமத்தையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்ற வேண்டும்.
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் ஒரு தெருவின் கடைசியில் வசிப்பவர் பாதிக்கப்பட்டால், அடுத்த தெருவும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பேரூராட்சி பகுதிகளிலும் இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
ஒரு பகுதியில் 5 அல்லது அதற்குமேற்பட்டவர்களுக்கு கண்டறியப்படும்போது, அது கிராம பஞ்சாயத்தாக இருந்தால், அப்பகுதியில் உள்ள கிராமங்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதுகுறித்து வட்டார மருத்துவ அதிகாரி, பிடிஓ உள்ளிட்டோர் ஆய்வு செய்து அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். ஒரு வட்டாரத்தின்எல்லைப் பகுதியில் கரோனா பாதிப்பு இருந்தால், அருகில் உள்ளவட்டாரங்களும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
அதேபோல், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஒரு வார்டில் அதிக பாதிப்பிருந்தால் அந்த வார்டு, எல்லைப்பகுதியில் பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள வார்டும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பேரூராட்சியைப் பொறுத்தவரை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட வேண்டும். அப்பகுதிகளில் 28 நாட்கள் கண்காணிப்பு இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT