Published : 05 May 2020 09:18 PM
Last Updated : 05 May 2020 09:18 PM
ஆவின் பால் தடையில்லாமல் கிடைக்கும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஆவின் பால் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக, ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் இன்று (மே 5) வெளியிட்ட அறிக்கையில், "ஆவின் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்பது போன்ற செய்திகளைச் சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் பின்வரும் விவரங்களை தெரிவித்துக் கொள்கிறது.
மாதவரம் பால் பண்ணை உள்ளிட்ட ஆவின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து இடங்களிலும் நுழைவாயிலில், பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், மாதவரம் பால் பண்ணை நுழைவாயில் சோதனையின்போது, பால் பண்ணைக்கு வெளியே லாரிகளில் 'பால் டப்'பை ஏற்றும் கடைநிலைப் பணியாளர் ஒருவருக்கு உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அரசு மருத்துவக்குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், முதலில் வந்த ஒரு நபருடன், பால் பாக்கெட்டுகளை எண்ணுகின்ற வேலை செய்த பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஆவின் நிறுவனத்தால் அந்த பாதிக்கப்பட்ட இடம் கிருமிநாசினி மூலம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது.
ஆவின் பால் பண்ணைகள் மற்றும் அலுவலகங்களில் நூறு சதவிகிதம் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருளான பால் இல்லாமல் பொதுமக்கள் கஷ்டப்படக்கூடாது. அதனால் இந்த இக்கட்டான நேரத்தில் ஆவின் பால், பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவின்படி, ஆவின் நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
பால் பண்ணையின் உள்பகுதி மற்றம் வெளிப்பகுதி கிருமிநாசினி மூலம் தினமும் முழுமையாகச் சுத்தம் செய்யப்படுகிறது. இந்தப் பணியாளரின் பிரச்சினைக்குப் பிறகு, சுத்தப்படுத்தும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஆவின் நிறுவனத்தின் புகழையும் நற்பெயரையும் கெடுக்கும் வகையில், பொய்யான செய்திகள் பரவி வருகின்றன. பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம். கலப்படமில்லாத தூய பால் வழங்கி வரும் ஆவின் நிறுவனம், போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்குத் தடையில்லாமல் பால் கிடைத்திட, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
இந்த இக்கட்டான நேரத்திலும் உங்களுக்காகப் பணியாற்றுகிறது ஆவின் நிர்வாகம். எனவே, பொய்யான செய்திகளைப் பொருட்படுத்தாமல், 24 மணி நேரமும் தரமான பாலை நுகர்வோர்களுக்கு வழங்க, முயற்சிகள் மேற்கொண்டு வரும் ஆவின் நிறுவனத்திற்கு, பொதுமக்கள் நல் ஆதரவை தொடர்ந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், ஆவின் நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கி வரும் பால் மற்றும் பால் பொருட்கள் அனைத்தும் பல்வேறு கட்ட தரபரிசோதனைகளுக்குப் பின்பே வெளிவருகிறது. தூய்மையான பால் பதப்படுத்தப்பட்ட பிறகுதான், பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
தரமான பாலைத் தடையின்றி வழங்கும் செயலை தொடர்ந்து ஆவின் நிறுவனம் மேற்கொள்ளும். எனவே, பொய்யான தகவல்களைப் புறம்தள்ளி பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT