Published : 05 May 2020 08:34 PM
Last Updated : 05 May 2020 08:34 PM
கரோனா காலத்தில் நீட் தேர்வை நடத்தாமல் மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மே 5) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா என்ற கொடூரத் தொற்றின் கோரத் தாண்டவத்தால், ஒட்டுமொத்த தேசமே அச்சத்திலும் பீதியிலும் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்திலும், ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்திருப்பது, மாணவ, மாணவியரைப் பற்றியோ, அவர்தம் பெற்றோர்களைப் பற்றியோ, மத்திய அரசுக்குத் துளியும் அக்கறையோ கவலையோ இல்லை என்றே தெரிகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கான தேதியைக் குறிக்கிறார்கள் என்றால், இது என்ன மாதிரியான மனநிலை என்பது புரியவில்லை.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான 68 ஆயிரம் கோடிக் கடனுக்குச் சலுகை அளிப்பதும், பல்லாயிரம் கோடி மதிப்பிலான நாடாளுமன்றக் கட்டிடத்துக்கான பணிகளைத் தொய்வின்றி தொடர்வதும், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி மதிப்பைச் சிதைத்து அதனை மத்திய அமைச்சகத்தின் ஏவல் அமைப்பாக மாற்றுவதுமான, வெகுமக்களுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத காரியங்களில் இந்த கரோனா காலத்திலும் குறியாக இருப்பது போலவே, நீட் தேர்வை நடத்தி சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைக் கலைப்பதிலும் மத்திய பாஜக அரசு அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
நாடு இப்போது இருக்கும் பதற்றமான சூழலில் என்ன மனநிலையுடன் மாணவர்களால் இந்தத் தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொண்டு எழுத முடியும்?
மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்தே கரோனா நோய் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. மார்ச் 16-ம் தேதி முதல் பள்ளித்தேர்வுகளே நடக்குமா, நடக்காதா என்ற நிலையில்தான் தேர்வுகள் நடந்தன.
இந்தியா முழுமைக்கும் மார்ச் 22-ம் தேதி ஒருநாள் மக்கள் ஊடரங்கு கடைப்பிடிக்கப்பட்டது. 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய தினமான 24-ம் தேதி தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் 144 தடையுத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன. ஆனால், அன்றைய தினம் கூட பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் தேர்வை எழுதினார்கள்.
அன்றைய தினம் காலை முதலே பொது மற்றும் தனியார் போக்குவரத்து இயங்கவில்லை. ஆனாலும் மாணவர்கள் தேர்வுக்கு வந்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில், எத்தகைய பதற்றத்தில் அவர்கள் தேர்வு எழுதி இருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. தமிழகத்தில் மட்டும் சுமார் 34 ஆயிரம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அன்று நடைபெற்ற தேர்வுகளை எழுதவில்லை. அவர்களது எதிர்காலத்துக்குப் பதில் சொல்ல வேண்டியது மாநில அரசு அல்லவா?
மேலும், இந்த நீட் தேர்வு எத்தகைய பாதிப்புகளை இந்நாட்டில் ஏற்படுத்தி வருகிறது என்பதைத் தொடர்ச்சியாகச் சொல்லி வருகிறேன். ஏழுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் உயிருக்கு உலை வைத்த தேர்வு இது. ஏழை, அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் தேர்வு இது.
லட்சக்கணக்கில் பணம் கட்டி பயிற்சி மையங்களில் படிக்க முடிந்த மாணவர்களுக்கு மட்டுமே வசதியான தேர்வு இது. தமிழில் படித்து, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மருத்துவத்துறைக்குள் நுழைய விடாத தேர்வு இது. எனவேதான் அந்தத் தேர்வை எதிர்க்கிறோம்.
இத்தேர்வு நியாயமாக நேர்மையாக நடைபெறவில்லை என்பதற்கு உதாரணமாக ஆள்மாறாட்ட வழக்குகள் பதிவாகி, பல மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் சிறையில் அடைக்கப்பட்ட காட்சியையும் பார்த்தோம்.
இப்படி முறையற்ற ஒரு தேர்வை, இந்தக் கரோனா காலத்திலும் நடத்தாமல் மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முறை தீர்மானம் போட்டு அனுப்பியுள்ளோம் என்பதால், மாநில அரசும், இத்தேர்வைக் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்" என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT