Published : 05 May 2020 06:36 PM
Last Updated : 05 May 2020 06:36 PM

டாஸ்மாக் கடைகளை அரசு மீண்டும் திறப்பதால் திருந்திய மனநோயாளிகள் பழைய நிலைக்குத் திரும்புவார்கள்: மனநலத்துறை நிபுணர்கள் கவலை

மதுரை

அரசு டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதால் குடிநோயிலிருந்து மீண்ட மனநோயாளிகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவார்கள் என்று மனநலத்துறை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கரோனா ஊரடங்கால் மார்ச் 25-ம் தேதி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், கடந்த 42 நாட்களாகத் திறக்கப்படவில்லை. ஆரம்பத்தில் மது குடிக்காததால் குடிக்கு அடிமையான குடிநோயாளிகள் மனநலம் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் அபாயம் இருக்கிறது என்று அஞ்சப்பட்டது. ஆனால், குடிநோயாளிகள் ஊரடங்கு கட்டாயத்தால் மது குடிக்காமல் இருந்ததால் அவர்கள் அந்நோயிலிருந்து மீண்டு வந்துள்ளனர். கடந்த கால் நூற்றாண்டாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டநிலையில், கரோனா ஊரடங்கால் அது இயல்பாகவே சாத்தியமானது. அதனால், தொடர்ந்து இதுபோல் அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற வாதமும் முன் வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் குடிநோயிலிருந்து மீண்ட நோயாளிகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவார்கள் என்பதால் அரசின் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் விக்ரம் ராமசுப்பிரமணியன், உளவியல் சிகிச்சையாளர் பா.ராஜசவுந்தரபாண்டியன் ஆகியோர் கூறியதாவது:

''மக்கள் நடமாட்டம் குறைந்ததால் மட்டுமில்லாது அரசு டாஸ்மாக் கடைகள் இயங்காமல் இருந்ததாலும் சாலை விபத்துகள், பாலியல் வன்முறைகள், சமூக மற்றும் குடும்ப வன்முறைகள் மிகவும் குறைந்துள்ளது. ஒரு குற்றம் நடப்பதற்கு முன், குற்றவாளிகள் போதைப்பொருட்களைப் பயன்படுத்திவிட்டுதான் அந்தச் செயலில் ஈடுபடுகிறார்கள்.

குடிநோயாளிகளில் லேசான, மிதமான, தீவிரமான நோயாளிகள் என மூன்று வகைப்படுவார்கள். திருவிழாக்கள், பார்ட்டிகளில் அவ்வப்போது குடிப்பவர்கள் குடிநோயாளிகள் இல்லை. இவர்கள் சமூக குடிப்பழக்கம் உள்ளவர்கள். இவர்கள் மாதத்திற்கு ஒரு முறையோ, ஆண்டிற்கு ஒரு முறையோ குடிப்பார்கள். மிதமான குடிநோயாளிகள் குடிநோயாளியாக மாறும் நிலையில் இருப்பவர்கள். வாரத்திற்கு குறைந்தது மூன்று முறை குடிப்பார்கள். நிறுத்தவேண்டும் என விரும்பினாலும் அவர்களால் முழுவதுமாக அதைப் பின்பற்ற முடியாது. தினசரி குடிப்பவர்கள், காலையிலே குடிப்பவர்கள் குடிநோய்க்கு அடிமையானவர்கள். இவர்கள் தீவிரமான நோயாளிகளாக கருதப்படுவார்கள். இவர்கள்தான் நிர்ணயித்ததை விட அதிக அளவு குடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும், குடும்ப நலத்திற்கும் தீங்கு ஏற்பட்டப்பிறகும் அதை விட முடியாமல் தவிப்பவர்கள்.

லேசான பாதிப்பு உள்ளவர்கள், சந்தர்ப்ப சூழ்நிலையில் சில காலங்களில் தீவிர பாதிப்பிற்கு ஆளாக வாய்ப்புள்ளது. 42 நாளாக ஒருவரால் மது இல்லாமல் சமாளிக்க முடிந்தது என்றால் அவர் அந்தப் பழக்கத்தை, நோயிலிருந்து விட்டு மீட்டு வந்துவிட்டார் என்றுதான் அர்த்தம். தற்போது மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பதால் ஏற்கெனவே தீவிரமாக இந்த நோய்க்கு அடிமையாகி இருந்தவர், இனி குடிக்கும்பட்சத்தில் திரும்பவும் ஆரம்பத்தில் மீண்டும் கணக்கைத் தொடங்கிவிடுவார்கள். திரும்பக் குடிக்க ஆரம்பிக்கும்பட்சத்தில் அவர்கள் விரைவாக மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார். மதுபானம் கிடைக்காமல் இருப்பது, அல்லது அதிலிருந்து விலகி இருப்பதுதான் மது போதைக்கு நிரந்தர தீர்வு ஆகும். அது தற்போது கரோனா சூழ்நிலையில் இயற்கையாகவே தமிழக குடிநோயாளிகளுக்கு வாய்த்து இருந்தது.

திரும்ப மதுக்கடைகள் திறப்பதால் பழைய நிலையைத் தொடருவது மட்டுமில்லாது தற்போதைய பொருளதார சூழ்நிலையில் குடிப்பதற்கு பணத்திற்காக மனைவியைக் கொடுமைப்படுத்துவது என எந்த ஒரு அபாயகரமான முயற்சிக்கும் அவர்கள் செல்வார்கள். அதனால், இனி குடும்ப வன்முறைகள் அதிகரிப்பதுடன் சமூக வன்முறைகளும் அதிகரிக்கும். கட்டாயத்தின் அடிப்படையில் இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் அவர்கள் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு இருந்தார்கள். மீண்டும் குடிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தல் நிச்சயமாக அதில் பெரும்பாலானவர்கள் திரும்பவும் அந்த பழக்கத்திற்கு அடிமையாக வாய்ப்புள்ளது. டாஸ்மாக் கடையைத் திறந்து அரசே அந்த சந்தர்ப்பத்தை குடிநோயாளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதால் இது சமுதாயச் சீரழிவுக்கே வழி வகுக்கும்''.

இவ்வாறு மனநலத்துறை நிபுணர்கள் கூறினர்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x