Published : 05 May 2020 04:29 PM
Last Updated : 05 May 2020 04:29 PM
கடலூர், விழுப்புரம் தமிழக பகுதிகளில் கரோனா தொற்று அதிகரிப்பதால் புதுச்சேரியில் பரவாமல் தடுக்க எல்லைகளில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறுக்கு பாதைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
புதுச்சேரியில் 42 நாட்களுக்குப் பிறகு அனைத்துத் தொழிற்சாலைகள், கடைகள் திறக்கப்பட்டன. இதனால் பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் 3 பேர் மட்டும் கரோனா தொற்றால் சிகிச்சையில் உள்ளனர். கடலூரை சேர்ந்த 3 பேர் ஜிப்மரில் சிகிச்சையில் உள்ளனர். புதுச்சேரியில் புதிதாக கரோனா தொற்று இல்லை.
அதேநேரத்தில் புதுச்சேரியை ஒட்டியுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகம். இருப்பதால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி-கடலூர் எல்லையான முள்ளோடையில் எஸ்.பி.க்கள் ஜிந்தா, சுப்ரமணியன், ராட்சனாசிங் ஆகியோர் தலைமையில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழகத்தில் புதுச்சேரி வரும் பொதுமக்கள், வாகனங்களை போலீஸார் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் கடலூர் பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
புதுச்சேரி விழுப்புரம் எல்லைப்பகுதியான கோரிமேட்டில் அனைத்துத் தமிழக வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது
புதுச்சேரி எல்லைகள் ஆன கண்ணியகோயில் மதகடிப்பட்டு கோரிமேடு அனுமந்தை ஆகிய பகுதிகளில் தமிழக பேருந்துகள் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.
குறிப்பாக புதுச்சேரி - விழுப்புரம் எல்லைப்பகுதியான கோரிமேடு பகுதியில் தமிழக பகுதியில் இருந்து வரும் பொதுமக்களை காலை முதலே திருப்பி அனுப்பி வருகின்றனர். திண்டிவனம், வானூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்கு மருத்துவம் மற்றும் வேலைகளுக்காக வரும் பொதுமக்களைத் தடுத்து நிறுத்தி யாருக்கும் அனுமதியில்லை என்று அறிவுறுத்தியும் போலீஸார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். இந்த பகுதியில் காலை முதலே புதுச்சேரியில் வருவதற்காக நின்றிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை அனுப்பி வைத்தனர்.
நகரப்பகுதிக்க்குள் தமிழக பதிவெண் வாகனங்களை விசாரித்தே போலீஸார் அனுப்புகின்றனர். புதுச்சேரியை சுற்றி சுமார் 200 இடங்களில் தடுப்புகளை போலீஸார் அமைத்துள்ளதாகத் தெரிவித்தனர். அத்துடன் புதுச்சேரிக்கு கடலூர், விழுப்புரத்திலிருந்து வர 81 சிறிய வழிகளும் அதிக கண்காணிப்பில் உள்ளன. அவை முழுக்க சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். முக்கியச்சாலைகள் ஏற்கெனவே மூடப்பட்டுள்ளதால் கடும் கண்காணிப்பில் போலீஸார், மருத்துவத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT