Published : 05 May 2020 04:10 PM
Last Updated : 05 May 2020 04:10 PM
குமரி மாவட்டத்தில் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரத்தின் ஏற்பாட்டில் மூன்று நேரமும் உணவு வழங்கப்படுகிறது. இதேபோல் குமரி சுற்றுவட்டார கிராமங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்போருக்கு அத்தியாவசியப் பொருள்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
பொதுமுடக்கத்தால் சென்னையில் இருந்தாலும் குமரி மாவட்ட மக்களுக்கு தனது செலவில் நிவாரண உதவிகளைச் செய்துவருகிறார் தளவாய் சுந்தரம். அந்த வகையில் சில கிராமங்களில் அதிமுக கிளைச் செயலாளர்களின் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களின் பட்டியல் பெறப்பட்டு அவர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார் தளவாய் சுந்தரம்.
இதுகுறித்து இந்து தமிழ் திசை இணையத்திடம் அவர் கூறுகையில், “தோவாளை ஊராட்சியின் பெரும்பாலான மக்கள் பூக்கட்டும் தொழிலை நம்பி இருப்பவர்கள். பொது முடக்கத்தால் தோவாளை மலர் சந்தை மூடப்பட்டுள்ளது. அதனால் அந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கைகொடுக்கும் விதமாக மூன்று வேளையும் உணவளிக்கும் சிறிய முயற்சியைத் தொடங்கினேன். தோவாளையில் மட்டும் 350 பேருக்கு தினமும் மூன்று நேரமும் உணவு வழங்கப்பட்டுவருகிறது. இதை அதிமுகவினர் அவர்களது வீடுகளுக்கே சென்று விநியோகித்து வருகின்றனர்.
‘தாழக்கிடப்போரை தற்காப்பதே தர்மம்’ என்ற அமுதமொழியை உதிர்த்தவர் அய்யா வைகுண்டர். அவரது தலைமைபதி அமைந்திருக்கும் சுவாமித்தோப்பைச் சுற்றி ஏராளமான தர்மம் எடுப்போர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் அதிமுக சார்பில் மூன்று நேரமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. பொது முடக்கம் முடிவுக்கு வரும் வரை அவர்களுக்கு உணவு வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று சொல்லி சுவாமித்தோப்பு அதிமுக கிளைச் செயலாளருக்கு நிதி அளித்திருக்கிறேன்.
இதேபோல் இன்னும் சில கிராமங்களிலும் அதிமுக கிளைச் செயலாளர்களிடம் இருந்து வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது. அதில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து ஒவொருவருக்கும் தலா 10 கிலோ அரிசியும் ஒரு மாதத்துக்கான மளிகைப் பொருள்களையும் வழங்கி வருகிறோம்.
இதுபோக, ஒவ்வொரு கிராமத்துக்கும் வறுமைக் கோட்டுப் பட்டியலில் இடம்பெறாமல் பொது முடக்கத்தால் சிரமத்துக்கு ஆளாகியிருக்கும் 50 குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களையும் வழங்கி வருகிறோம். உள்ளூரில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் இந்த நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு அவர்களுக்கு வேறு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அழைக்கச் சொல்லி எனது அலைபேசி எண்ணையும் கொடுக்கச் சொல்லியிருக்கிறேன். அப்படி வரும் அழைப்புகளின் அடிப்படையிலும் உதவிகளைச் செய்துகொண்டிருக்கிறோம். இதுபோக, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் கட்சிப் பாகுபாடு கடந்து இதேபோல் உதவி வருகிறோம்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த எனது சொந்தச் செலவில் கிருமிநாசினி வண்டி ஒன்றையும் ஏற்பாடு செய்திருக்கிறேன். அந்த வண்டிக்கு நாளொன்றுக்கு ஆறாயிரம் ரூபாய் வாடகை. அது தினம் ஓர் ஊராட்சிக்குப் போய்வருகிறது. இதுபோக, சில ஊராட்சிகளுக்கு கிருமிநாசினி தெளிப்பானும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.
தூய்மைப் பணியாளர்கள்தான் இப்போது கரோனா ஒழிப்பில் முன்வரிசையில் நிற்கிறார்கள். மற்ற எவரையும்விட பொருளாதாரத்தில் பின்வரிசையில் இருக்கும் இவர்களை உரிய முறையில் கவுரவிக்கவும் குமரி அதிமுகவை அறிவுறுத்தியிருக்கிறேன். அந்த விதத்தில், தினம் ஒரு ஊரில் தூய்மைப் பணியாளர்களுக்கு நாஞ்சில் நாட்டுக் கல்யாண விருந்து வைத்து, நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறோம்” என்றார் தளவாய் சுந்தரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT