கோயம்பேட்டிலிருந்து கடலூர் வந்த மேலும் 68 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது
கடலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 68 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 228 ஆக உயர்ந்திருக்கிறது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கோயம்பேடு காய்கனி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்களாகப் பணி புரிகின்றனர். அங்கு கரோனா தொற்றுப் பரவல் தீவிரம் அடைந்ததை அடுத்து அவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்கள் அனைவரையும் நான்கு இடங்களில் தனிமைப்படுத்தி பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
இவர்களில் நேற்று 129 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 430 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியிருந்தது. அதிலிருந்து வந்த முடிவுகளின்படி இன்று மேலும் 68 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்தவர்களில் 197 பேர் கரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. எஞ்சியவர்களுக்கான பரிசோதனை முடிவுகளும் வெளியானால் கடலூர் மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூடும் எனத் தெரிகிறது.
