Last Updated : 05 May, 2020 01:37 PM

 

Published : 05 May 2020 01:37 PM
Last Updated : 05 May 2020 01:37 PM

கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குறைந்த நாளில் வீடு திரும்பிய 96% நோயாளிகள்: கூட்டு முயற்சியால் வெற்றி கண்ட கோவை இஎஸ்ஐ மருத்துவமனை

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகள்.

கோவை

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில், கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குறைந்த நாட்களில் 96 சதவீத நோயாளிகள் வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை முடிந்து அதிகம் பேர் வீடு திரும்பிய மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ளது கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. அங்கு சிகிச்சை பெற்று வந்த கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 255 பேரில் 245 பேர் சிகிச்சை முடிந்து மே 4-ம் தேதி வரை வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சை பெற்ற யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை. குறைந்தபட்சமாக பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையும், அதிகபட்சமாக 85 வயது மூதாட்டியும் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடர்புகொண்டு, மருத்துவனையின் செயல்பாடுகள் குறித்து பிரதமரின் வாழ்த்துகளை டீனிடம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமியும் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசியுள்ளார். இதுகுறித்து இஎஸ்ஐ மருத்துவமனையின் டீன் ஏ.நிர்மலாவிடம் பேசினோம்.

டீன் நிர்மலா

அறிகுறியே இல்லாமல் எத்தனை சதவீதம் பேர் அனுமதிக்கப்பட்டனர்?

சிகிச்சை பெற்றவர்களில் 70 சதவீதம் பேர் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தனர். 30 சதவீதம் பேருக்குதான் காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தன. அறிகுறிகள் இல்லாமல் இருந்தவர்களில் சில பேரைப் பார்க்கும்போது அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக தோற்றமளித்தார்கள். ஆனால், எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் சிலருக்கு நுரையீரலில் மாற்றங்கள் இருந்தன. அதன் பிறகு, அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளித்தோம்.

யாருக்கேனும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்ததா?

இதுவரை யாருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தேவைப்படவில்லை. அதேபோல, வென்டிலேட்டரும் தேவைப்படவில்லை.

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் என்னென்ன?

அரசு அறிவுறுத்தியுள்ளபடி நோயாளிகளுக்கு மாத்திரைகளை அளிக்கிறோம். அதுபோக வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகளை அளிக்கிறோம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்தான உணவுகள், முட்டை, பழச்சாறு, பழங்கள், சூப், கஞ்சி, கபசுரக் குடிநீர் ஆகியவற்றை வழங்குகிறோம்.

நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி, அவர்களுக்கேற்ற மாத்திரைகள், உணவுகளை வழங்குகிறோம். மனதளவில் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க உளவியல் நிபுணர்களைக் கொண்டு ஆலோசனைகள் வழங்குகிறோம்.

பாதிப்பில் இருந்து நோயாளி மீண்டுவிட்டார் என்பதை எப்படிக் கண்டறிகிறீர்கள்?

நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 12 மற்றும் 13-ம் நாளில் கட்டாயம் 'ஸ்வாப்' பரிசோதனை மேற்கொள்கிறோம். அந்த இரண்டு சோதனைகளிலும் 'நெகட்டிவ்' என முடிவு வருபவர்களை மட்டுமே 14-ம் நாளில் வீட்டுக்கு அனுப்புகிறோம். அதற்கு முன்பு நுரையீரலில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய எக்ஸ்ரே எடுக்கிறோம்.

ஒருவேளை 'ஸ்வாப்' பரிசோதனையில் 'பாசிட்டிவ்' என்று தெரியவரும் நோயாளிகளை, மேற்கொண்டு 7 நாட்கள் மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை அளிக்கிறோம். எக்ஸ்ரேவில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்கிறோம். அதில் பாதிப்பு இருப்பது தெரியவந்தால், அவர்களை வீட்டுக்கு அனுப்புவதில்லை. சிகிச்சையளித்து மீண்டும் பரிசோதித்து, பிரச்சினை ஏதும் இல்லையென்றால் மட்டுமே வீட்டுக்கு அனுப்புகிறோம்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோருக்கு என்னென்ன அறிவுறுத்தல்களை வழங்குகிறீர்கள்?

சிகிச்சை முடிந்து செல்பவர்கள் அடுத்த 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும். அந்த 14 நாட்கள் வெளியே செல்லக்கூடாது. கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். 2, 3 மாதங்களுக்கு தனிமனித விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இளம் வயதினராக இருந்தால், குழந்தைகள், பெரியவர்களுக்கு அருகில் செல்லக்கூடாது. முடிந்தவரை தனிக் கழிப்பறைகளைப் பயன்படுத்த அறிவுறுத்துகிறோம். வீட்டில் ஒரு கழிப்பறை மட்டுமே இருந்தால், அதைக் கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும்.

வீடு திரும்பியவர்களில் யாரேனும் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்களா?

ஒரே ஒருவர் மட்டுமே காய்ச்சல் அறிகுறிகளுடன் 5 நாட்கள் கழித்து அனுமதிக்கப்பட்டார். மீண்டும் அவருக்கு அனைத்துப் பரிசோதனைகளையும் மேற்கொண்டதில் அவருக்கு 'நெகட்டிவ்' என முடிவு வந்தது. ஒரே நாளில் காய்ச்சலும் குணமாகிவிட்டது. பின்னர், அவர் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அதிக நோயாளிகள் விரைவாக வீடு திரும்பக் காரணங்கள் என்னென்ன?

மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்ட அனைவரின் கூட்டு முயற்சியே முக்கியக் காரணம். மருத்துவர்கள் 3 பணிநேரத்தின் அடிப்படையில் பணியாற்றினர்.

நிறைய நோயாளிகள் இருந்த நேரத்தில் ஒரே நாளில் 45 மருத்துவர்கள் வரை பணியாற்றினர். நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதால் மருத்துவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளோம். திடீரென எண்ணிக்கை அதிகரித்தால் பயன்படுத்திக்கொள்ளவும் ஒரு குழுவைத் தயார் நிலையில் வைத்துள்ளோம்.

அதிகபட்சம் 400 நோயாளிகள் வரை எங்களால் கையாள முடியும். இந்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் சுகாதாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ், துறை இயக்குநர்கள் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் தினமும் அறிவுறுத்தல்களை வழங்குகின்றனர். அதுபோக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி ஆகியோர் பெரிதும் உதவியாக இருந்து வருகின்றனர்.

இவ்வாறு டீன் நிர்மலா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x