Published : 05 May 2020 12:46 PM
Last Updated : 05 May 2020 12:46 PM
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் மீது, எந்தச் சூழ்நிலையிலும் கருணை காட்ட வேண்டும் என்பது எழுதப்படாத நியதி. ஆனால், எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான ஒரு தாய், கரோனா பொதுமுடக்கத்தின் காரணமாகத் தன் குழந்தைகளைக் காப்பகத்திலிருந்து அழைத்து வர முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார். அவரை இரு மாநிலப் போலீஸார் அலைக்கழிப்பதுதான் உச்சபட்சத் துயரம்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ளது மீனாட்சிபுரம். இங்கிருந்து நான்கைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர். கூலித்தொழிலாளியான இவரது கணவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு எச்.ஐ.வி பாதிப்பால் இறந்துவிட்டார்.
இந்தத் தம்பதிக்கு 4 குழந்தைகள். பெற்றோருக்கு எச்.ஐ.வி இருந்தாலும் அந்தக் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை. எனவே, கோவை பகுதியில் உள்ள, ஒரு காப்பகத்தில் அவர்களைச் சேர்த்துள்ளார் அந்தப் பெண். குழந்தைகள் அங்கே தங்கித்தான் பள்ளி சென்று படித்து வருகிறார்கள். அவர்களை வருடத்திற்கு ஒரு முறை கோடை விடுமுறையின்போது மட்டுமே தன் வீட்டிற்கு அழைத்து வர அப்பெண்ணுக்கு அனுமதியுண்டு. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளில் 30 பேரை அவரவர் பெற்றோர் வந்து அழைத்துச் சென்றுவிட்டனர்.
ஆனால், அந்தப் பெண்ணால் தன் குழந்தைகளை அழைத்துவர முடியவில்லை. ஏனென்றால் அவர் வசிக்கும் கிராமம், தமிழகப் பகுதியில்தான் இருக்கிறது என்றாலும் மீனாட்சிபுரத்திலிருந்து அதற்குச் செல்ல சில கிலோ மீட்டர் தூரம், கேரளப் பகுதிக்குள் சென்றுதான் உள்ளே நுழைய முடியும். அதனால், எல்லையில் உள்ள போலீஸார் அவரை இந்த வழியே செல்ல அனுமதிக்கவில்லை. எனவே, பொள்ளாச்சி துணை ஆட்சியரிடம் அனுமதிக் கடிதம் பெற்று குழந்தைகளை அழைத்து வரப் புறப்பட்டிருக்கிறார்.
சோதனைச் சாவடியில் இருக்கும் தமிழகப் போலீஸார், அந்தக் கடிதத்தைப் பார்த்து அவர் செல்ல அனுமதித்துவிட்டனர். ஆனால், கேரளப் போலீஸார் அனுமதி வழங்கத் தயாரில்லை. ‘பாலக்காடு ஜில்லா கலெக்டரிடம் கடிதம் வாங்கினால்தான் ஆச்சு’ என அவரை அலைக்கழித்துள்ளனர். வேறு வழியில்லாமல் அதே கடிதத்தை வைத்து பொள்ளாச்சி வந்து திவான்சாபுதூர், கணபதிபாளையம் என வேறொரு சுற்று வழியில் குழந்தைகளை அழைத்து வர முயற்சி செய்தார் அந்தப் பெண். அதற்குள், துணை ஆட்சியரிடம் அவர் வாங்கியிருந்த அனுமதிக் கடிதம் காலாவதியாகிவிட்டதாக அங்குள்ள போலீஸார் தெரிவித்துவிட்டனர்.
தவித்துப்போன அந்தப் பெண், மீண்டும் துணை ஆட்சியர் அலுவலகம் போய் நின்றபோது, இரண்டாவது முறையாக அனுமதிக் கடிதம் தர முடியாது என்று கறாராகச் சொல்லி அனுப்பி விட்டனர் அதிகாரிகள். இதனால் தன் குழந்தைகளைத் தன் இருப்பிடம் அழைத்து வர முடியாமல் திண்டாடி வருகிறார் அந்தத் தாய்.
இதுகுறித்து அவரிடம் பேசியபோது, “என் குழந்தைகள் எனக்கு தினசரி போன் செய்து அழுகிறார்கள். காப்பகத்தின் காப்பாளர், ‘எல்லா குழந்தைகளும் போயிருச்சு. நீ எப்போ வந்து குழந்தைகளைக் கூட்டீட்டுப் போறே?’ன்னு கேட்கிறார். என்ன செய்யறதுன்னே தெரியலை. எப்படியாவது கேரளப் பகுதி வழியாகவே குழந்தைகளை அழைத்து வரலாம் என்றுதான் முயற்சி செய்தேன். முடியவில்லை. இப்ப திவான்சாபுதூர் வழியே வந்தால் கொஞ்ச தூரம் நடந்தே பிள்ளைகளைக் கூட்டிப் போய்விடலாம் என்று பார்க்கிறேன். ஆனால், அனுமதி தர நம் அதிகாரிகளே மறுக்கிறார்கள். ஒரு தாயாக நான் செய்வதறியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கும் என் குழந்தைகளுக்கும் உதவி கிடைக்காதா?” என்று கதறினார்.
அவரது குழந்தைகளை அழைத்து வர முயற்சி எடுத்துவரும் பொள்ளாச்சியைச் சேர்ந்த பழங்குடியினர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தனராஜிடம் பேசினோம்.
“சாதாரண ஆட்களைத்தான் அதிகாரிகள் அலைக்கழிக்கிறார்கள் என்றால் எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான பெண்ணிடம்கூட கருணை காட்டாமல் அலைக்கழிக்கிறார்கள். நாங்களும் பல முறை விண்ணப்பம் தந்து சொல்லிப் பார்த்துவிட்டோம். அந்த காப்பகத்துக்காரர் கோவையில் உள்ள அதிகாரிகளிடமும் பேசிப் பார்த்துவிட்டார். எதுவும் நடக்கவில்லை. யாராவது அந்தத் தாயுடன் அவரின் குழந்தைகளை அழைத்துவர உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதற்குப் பிறகாவது அந்தத் தாயின் கண்ணீர், அதிகாரிகளின் மனதைக் கரைக்கும் என்று நம்புவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...