Published : 05 May 2020 12:04 PM
Last Updated : 05 May 2020 12:04 PM
இன்று காலையில் வழக்கமான நடைப்பயிற்சி முடிந்து வரும் வழியில் என்னைப் பார்த்ததும் மிதிவண்டியில் இருந்து இறங்கி வணக்கம் தெரிவித்தார் அந்த நபர். அதிகாலை 5 மணிவேளை என்பதால் அவரை முதலில் எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால், குரல் நன்கு பரிச்சயமாகியிருந்ததால் “என்னா செல்வராசு நல்லாருக்கீங்களா?” என்று நலம் விசாரித்தேன். “இருக்கேங்க...” என்று உடனடியாக பதிலளித்தார். அவர் விவசாயத் தொழிலாளர். எங்கள் வயல்களில் அவர்தான் வேலைகளைக் கவனித்துக்கொள்வார்.
கடந்து வந்ததும்தான் எனக்கு உரைத்தது. கடந்த பத்தாண்டுகளாக இப்படி ஒரு அமைதியை அவரிடம் பார்த்ததில்லை. எப்போதும் நிறை போதையில்தான் இருப்பார். நிலைகொள்ளாமல் தடுமாறிக்கொண்டே செல்வார். பூங்குயிலே என்ற கிராமத்துப் பாடலை எப்போதும் பாடிக்கொண்டேயிருப்பார். யாராவது நிறுத்திப் பேசினால், “கரன்ட் கட்டு, வார்த்தை சுத்தம்” என்ற இரண்டு வார்த்தைகளை மூச்சுக்கு மூச்சு பேசுவார். சில சமயங்களில், “லைன்ல வா” என்று சம்பந்தமில்லாமல் பேசுவார். அவரை யாராவது தேடினால்கூட, “ கரன்ட் கட்டு எங்க போனார்... ஆளக்காணுமே?” என்று தான் விசாரிப்பார்கள்.
வேலைக்குப் போகும் நாட்களில் கிடைக்கும் ஊதியம் முழுவதையும் பாட்டிலுக்குத்தான் செலவழிப்பார். குடித்தது போக எப்போதும் இரண்டு, மூன்று பாட்டில்களை கால்சராயில் வைத்திருப்பார். காலை, மதியம் இருவேளையும் வேலை தளத்தில் உணவு கிடைத்துவிடும். இரவு உணவு தேவைப்படாது. அவருக்கு ஒரு வீடு இருக்கிறது. மனைவி இறந்துவிட்டார். அவர் மகன், பிள்ளைகளுடன் தனியே ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இரண்டு வீட்டுக்குமே போகமாட்டார்.
எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள கோயில் வாசலில் மிதிவண்டியைக் கீழே போட்டு அதன்மேல் தலையை வைத்து உறங்குவார். உறங்குவதற்கு முன் குறைந்தது ஒருமணி நேரமாவது பூங்குயிலே பாட்டு அல்லது ஒப்பாரிப் பாட்டுச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அதிகாலையில் எழுந்து பையில் இருக்கும் பாட்டிலை வாயில் கவிழ்த்துக் கொண்டு டீக்கடைக்குப் போவார். அங்கிருப்பவர்களிடம் எதாவது தகராறு செய்து கொண்டிருப்பார். விடிந்ததும் வேலை, மாலையானால் போதை. இதுதான் இவரது வாடிக்கை. முகச்சவரமெல்லாம் மாதத்துக்கு ஒருமுறைதான்.
இப்படிப்பட்டவர் இன்று காலை இவ்வளவு நிதானமாக, அமைதியாகச் சென்றதும் எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இந்த பொதுமுடக்க வேளையிலும் முகச்சவரம் முடித்து ஆளே பளிச்சென்று இருந்தார். சமீப நாட்களாகவே இவரது பாட்டுச் சத்தம் எங்குமே கேட்கவில்லை என்பதும் அப்போதுதான் நினைவுக்கு வந்தது. உடனே, அவரை அழைத்துப் பேசத் தொடங்கினேன். “என்ன இவ்வளவு தெளிவு... என்னாச்சு?” என்றேன்.
“கிடைக்கலங்க. அதனால குடிக்கல” என்றவரிடம், ”குடிக்காததால இப்ப என்ன குடி முழுகிப்போச்சு” என்றேன். “எதுவுமே குடிமுழுகிப் போகல. இப்பதான் நல்லாயிருக்கன். ஒடம்பு சும்மா கலகலன்னு இருக்கு. நல்லாப் பசிக்குது, ரெண்டு வேளை வயுறு ஃபுல்லா சாப்புடறேன். காலைல வெளிக்கு நல்லாப் போவுது. ரெண்டு வேளையும் குளிக்கிறேன். வேலையிருந்தா செய்யுறேன், இல்லைன்னா வீட்டுல படுத்துத் தூங்குறேன்.
முன்னாடியெல்லாம் கூலிய வாங்கிக் குடிச்சுடறதால வீட்டுக்கு கீத்துக்கூட கட்டமுடியாம இருந்துச்சு. இப்ப கடை இல்லாததால குடிக்கல. அந்த காசச் சேத்துவைச்சு கீத்து வாங்கி ஆளுவைச்சு வீட்டை சரி பண்ணுனேன். சைக்கிளு ரிப்பேரா இருந்துச்சு. அதையும் ரிப்பேர் பண்ணுனேன். என் மவன் ஒடம்பு சரியில்லாம இருந்தான். அவனுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தேன். இப்பதாங்க வாழ்க்கைன்னா என்னான்னு தெரியுது” என்று முகம் மலரச் சொன்னார் செல்வராஜ்.
“நாளன்னிக்கு கடைய திறக்கப்போறாங்க, இனிமே கவலையில்லை” என்று 7-ம் தேதி முதல் மதுக்கடை திறக்கப்படுவதைச் சுட்டிக் காட்டினேன்.
“ஐயையோ... வேணாம்னு சொல்லுங்க, இப்ப தொறக்க வேணாம்னு சொல்லுங்க. கடையைத் தொறந்தா என்னையப் போல இருக்கிற எல்லாரும் நேரா சுடுகாட்டுக்குத்தான் போவணும். நாப்பது நாளா இந்த பாழாப்போன குடியில்லாம எல்லாரும் நேரா நடக்குறான், வேளாவேளைக்கு சாப்புடறான். கை, காலு ஆடாம ஸ்டடியா ஆயிருக்கு. காசு மிச்சமாயிருக்கு. வீட்டுல பொண்டாட்டி, புள்ளையோட சந்தோசமா இருக்கான். கடையில்லாததால குடிக்காம இருந்தோம். இப்ப போய்க் கடையத் தொறந்தா எல்லாம் தலைகீழா ஆயிடும். பழையபடி, சம்பாதிக்கிற காசையெல்லாம் கடையில கொண்டு கொட்டிடுவானுங்க. வேணாம் சாமி கடையத் தொறக்க வேணாம் சாமி” என்று கையெடுத்துக் கும்பிட்டார் செல்வராஜ்.
இவ்வளவு நேரம் பேசியபோதும் அவரது வார்த்தைகளில் கரன்ட் கட் என்ற வார்த்தை வரவேயில்லை. யோசித்துப் பார்க்கிறேன். மது என்ற கரன்ட் கட் ஆனதால் அவருக்குள் இந்த மாற்றம் சாத்தியமாகியிருக்கிறது.
தமிழக அரசும் இதைச் சிந்திக்கட்டும். மூடியது மூடியதாகவே இருக்கட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT