Published : 05 May 2020 10:27 AM
Last Updated : 05 May 2020 10:27 AM

கரோனாவும் தமிழகப் பழங்குடிகளும்!

பிரதிநிதித்துவப் படம்

கணவனும் மனைவியும் வெவ்வேறு மாவட்டங்களில் கொத்தடிமைகளாக செங்கல் சூளைகள், தோட்ட வேலைகள், தினக்கூலிகளாக உள்ளனர். வீட்டில் குழந்தைகள் தனித்து வாழ்கின்றனர். குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ் இல்லாததால், பலருக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேருவதற்கான வழிகளும் அடைபட்டிருக்கின்றன. சரிபாதியினருக்கு நில உரிமையும் இல்லை. தங்களை அடையாளப்படுத்த அரசியல் தலைமையும் தங்கள் சமூகத்திலிருந்து யாரும் இல்லை. இதனால் இந்த ஊரடங்கு காலத்தில் ஏற்கெனவே நொடிந்து போயிருந்த அவர்களின் வாழ்வு இன்னும் மோசமாகியுள்ளது. இப்படித்தான் தமிழகத்தில் இருளர்கள், ஆதியன் எனும் பூம்பூம் மாட்டுக்காரர்கள், குறும்பர்கள், காட்டுநாயக்கர்கள் உள்ளிட்ட பழங்குடி மக்களின் ஊரடங்கு காலம் போய்க்கொண்டிருக்கிறது.

மலைக்கிழங்கும் காட்டில் கிடைக்கும் கீரைகளுமே அவர்களின் வயிற்றை இக்காலத்தில் நிரப்பிக்கொண்டிருக்கிறது. ஊரடங்கில் அவர்கள் படும் இன்னல்கள் குறித்து பழங்குடி மக்கள் சிலரிடம் பேசினோம்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், பூம்பூம் மாட்டுக்காரர் சமூகத்தைச் சேந்த மணிமாறன் (26), தங்கள் குடியிருப்பில் தான் மட்டும்தான் அந்தத் தொழிலைச் செய்யவில்லை என்கிறார்.

"எங்கள் குடியிருப்புப் பகுதியில் 23 பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்கள் உள்ளன. இங்கு நான் மட்டும்தான் அந்த வேலையைச் செய்யவில்லை. அரிசி ஆலையில் கூலி வேலை செய்கிறேன். எனக்கு ஒரு நாளைக்கு 450 ரூபாய் சம்பளம்.

பூம்பூம் மாட்டுக்காரர்கள் வெள்ளிக்கிழமை என்றால் பிழைப்புக்காக திண்டிவனம் செல்வார்கள். ஒரு சுருக்குப் பை 5 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரைக்கும் விற்பார்கள். திருஷ்டி கயிறு, 'ஆலா' பாட்டில்கள் (பிளீச்சிங் திரவம்) ஒன்றை ரூ.10க்கு விற்பார்கள். இல்லையென்றால், பூம்பூம் மாட்டை வைத்து வித்தை காண்பிப்பார்கள். இப்போது இதில் எந்த வேலையும் இல்லை" என்கிறார்.

வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மணிமாறனுக்கு 4 வயது, இரண்டரை வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.

பூம்பூம் மாட்டுக்காரர்கள், பிரதிநிதித்துவப் படம்: ஆர்.அசோக்

இருளர்கள், பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்கள் பெரும்பாலானோர் கூரை வீடுகளில்தான் வசிக்கின்றனர். அவர்கள் வசிக்கும் நிலத்திற்குப் பட்டாவும் இல்லை. கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள சுய சுத்தம் வேண்டும் என்பதே உலக சுகாதார மையம் முதல் எல்லா அரசுகளும் சொல்லும் முக்கிய விதியாகும். ஆனால், தண்ணீர் வசதியும் கழிவறை வசதியும் இல்லாமல், கரோனா காலம் மட்டுமல்லாது மற்ற எல்லாக் காலங்களிலும் நோய்த்தொற்றுக்கு எளிதில் ஆட்படுபவர்களாக பழங்குடிகள் இருக்கின்றனர்.

"எல்லோரும் குடிசை வீடுகளில்தான் வசிக்கிறோம். இன்னும் சிலர் டென்ட் போட்டுக்கொண்டு அதில் குடியிருக்கின்றனர். அரசு வீட்டுக்கு ஒரு கழிவறை கட்டிக்கொடுத்தது. அவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இயற்கை உபாதைகளைக் கழிக்க கொஞ்சம் தூரம் தள்ளி மலைப்பக்கம்தான் செல்ல வேண்டும். பெண்களுக்கும் இதே நிலைதான். பெண்கள் குளிப்பதற்கு மட்டும் கூரை வேய்ந்து கழிவறை கட்டியுள்ளோம். தெருக்குழாயில்தான் தண்ணீர் பிடிக்க வேண்டும். டேப் வசதியெல்லாம் இல்லை" எனக் கூறுகிறார், மணிமாறன்.

"அவசரம் என்றால் வீட்டில் கழிவறை கூட இல்லை. 1 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். இரவு அல்லது அதிகாலையில்தான் செல்ல வேண்டும். பகலில் அவசரமென்றாலும் போக முடியாது. இயற்கை உபாதைகளுக்காக வெளியே செல்வது எங்களுக்குப் பழகிவிட்டது" என்கிறார், மணிமாறனின் மனைவி.

பழங்குடிகள் சந்திக்கும் மற்றொரு பிரச்சினை அவர்களில் பலருக்கும் கேஸ் அடுப்பு இல்லை, விறகு அடுப்புதான்.

"விறகு அடுப்புதான் பயன்படுத்துகிறோம். கேஸ் அடுப்பு வாங்க வசதியில்லை. இருக்குற வசதிக்கு கேஸ் அடுப்பு எப்படி வாங்க முடியும்? ஊரடங்குனால கணவருக்கு வேலை இல்லை, காசு இருக்குறப்ப சாப்பிட வேண்டியதுதான், இல்லாதப்ப அப்படியே கிடக்க வேண்டியதுதான்" எனக் கவலையுடன் தெரிவிக்கிறார், மணிமாறனின் மனைவி.

சென்னை விமான நிலையத்தில் ப்ரீ பெய்டு டாக்ஸி ஓட்டுநராகப் பணிபுரியும் 25 வயது சேதுவுக்கு டாக்ஸிதான் வீடு. திண்டிவனம் - செஞ்சி சாலையில் உள்ள தேரடிக்குப்பத்தைச் சேந்த சேது, கடந்த 3 மாதங்களாக வருமானம் இன்றி தவிப்பதாகக் கூறுகிறார். 10-வது வரை படித்திருக்கும் அவர், 6 ஆண்டுகளாக டாக்ஸி ஓட்டி வருகிறார்.

"இங்கு பூம்பூம் மாட்டுக்காரர் சமூகத்தைச் சேந்த 15 குடும்பங்கள் இருக்கின்றன. திருஷ்டி கயிறு, ஆலா, நீலம், சவுரி முடி வியாபாரம் செய்வதுதான் இங்கு பலரது வேலை. பூம்பூம் மாடுகளை வைத்து இப்போது பிழைப்பதில்லை. பலரும் வெளியூர்களில் வேலை செய்கின்றனர்.

நான் சென்னை விமான நிலையத்தில் ப்ரீ பெய்டு டாக்ஸி ஓட்டுநராக உள்ளேன். மாதம் ஒரு 15 ஆயிரம் சம்பளம் வரும். காலை 6 மணி முதல் இரவு 3 மணி வரை டாக்ஸி ஓட்டுவோம். எந்த நேரத்தில் சவாரி வரும் என்று தெரியாது. நாங்கள் வீடெல்லாம் எடுத்துத் தங்கவில்லை. டாக்ஸியிலேயே தான் தங்கிக்கொள்வோம். விடுமுறை என்றால் வீட்டுக்கு வருவோம்.

எங்களிடம் ஒன்றுமே இல்லை. நிலம் இல்லை, சேர்த்து வைத்த பொருள் இல்லை. எங்களின் கஷ்டத்தை தனியா சொல்ல முடியுமா? எல்லாமே கஷ்டம் தான். பக்கத்தில் கடன் வாங்கி, ஒரு கிராம் நகையை அடகு வைத்துச் செலவு செய்கிறோம். இங்கு எம்.ஏ. படித்தவர்களும் இருக்கின்றனர். அவர்களும் வேலை இல்லாமல் எங்களுடன் டாக்ஸி ஓட்டுகின்றனர்" என தங்களின் இன்னல்களைக் கூறுகிறார் சேது.

சேதுவுக்குத் தந்தை இல்லை. சேதுவின் சகோதரர்கள் 3 பேரும் சென்னையில் டாக்ஸி ஓட்டுநராகவும் தம்பி கட்டிடக் கூலி வேலையும் செய்து வருகின்றனர்.

"எங்கள் பகுதியில் 2 வீடுகளில் தான் டிவி இருக்கிறது. அரசின் திட்டங்கள் எங்களுக்கு 'ரீச்' ஆகவில்லை. எங்கள் சமூகத்தில் யாரும் அரசியலில் இல்லை. அரசு வேலைகளில் இல்லை. அதனால் எங்களுக்கு எதுவும் சேரவில்லை" என்கிறார், சேது.

இருளர் பழங்குடிகள் பலரிடம் பேசியதிலிருந்து ரேஷன் பொருட்களாலும், ரூ.1,000 நிவாரணத் தொகையாலுமே பலரது வாழ்க்கை கழிந்துகொண்டிருக்கிறது தெரியவந்தது. தன்னார்வலர்கள் கொடுக்கும் உணவும், மளிகைப் பொருட்களையும் வைத்து அவர்கள் சமாளித்துக்கொண்டிருக்கின்றனர்.

ரேஷன் அட்டை இல்லாதவர்களின் நிலைமை இன்னும் மோசமானதாக உள்ளது என்கின்றனர். பழங்குடிகளுக்கு துணை ஆட்சியர் அல்லது ஆர்.டி.ஓ தான் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆதி திராவிடர்களுக்குத் துணை வட்டாட்சியரே வழங்கலாம். அதனாலேயே இருளர் பழங்குடிகளில் பலருக்கும் சாதிச் சான்றிதழ் இல்லை.

விழுப்புரத்தில் உள்ள இருளர் பழங்குடி குடியிருப்பு. படம்:எஸ்.எஸ்.குமார்

திண்டிவனம் அடுத்த தேங்காய்பாக்கத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடி குப்பன் (25), விவசாயக் கூலியாக இருக்கிறார். ஒரு நாளைக்கு ரூ.300 வருமானம் ஈட்டும் குப்பன், தற்போது அந்த சொற்பப் பணமும் இல்லாமல் திண்டாடுகிறார்.

"சில தன்னார்வலர்கள் வந்து எங்களுக்கு உதவுகின்றனர். வேறு யாரும் எங்களுக்கு உதவவில்லை. இங்கு 50 இருளர் குடும்பங்கள் இருக்கின்றன. எங்களின் பகுதிக்கு நேற்றுதான் தெருவிளக்கே போட்டனர். இதுதான் எங்களின் நிலைமை. இங்கு பலரும் மல்லிகைத் தோட்டங்களில் பூப்பறித்தல் உள்ளிட்ட வேலைகளைச் செய்கின்றனர்.

இருப்பதை வைத்து ஏதோ சமாளிக்கிறோம். 50 குடும்பங்களில் 22 குடும்பங்களுக்குத்தான் குடும்ப அட்டைகள் உள்ளன. புதிதாகத் திருமணம் ஆன சில குடும்பங்கள், 6 மாதங்களுக்கு முன்பு எழுதிக்கொடுத்தும் குடும்ப அட்டை இன்னும் வரவில்லை. அவர்களின் நிலைமை இன்னும் மோசம்" என்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் வீரணாமூர் கிராமத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடி சின்னசாமி, தங்கள் பகுதிக்கு வந்து பிளீச்சிங் பவுடர் தெளிக்கக் கூட பணியாளர்கள் பயந்துகொண்டு வருவதில்லை என்கிறார். செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்து மீண்ட சின்னசாமியின் மகள் சங்கீதா, தற்போது தனியார் கல்லூரியில் செவிலியர் படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

சங்கீதாவின் படிப்புச் செலவை கல்லூரி முதல்வரே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், புத்தகங்கள், தேர்வுக்கட்டணம் செலவுகளை சின்னசாமிதான் பார்த்துக்கொள்ள வேண்டும். முதலாம் ஆண்டில் இதுவரை ரூ.20 ஆயிரம் செலவழித்துள்ள அவர், அடுத்து வரும் கல்விச்செலவுகளைச் சமாளிப்பதை இந்த ஊரடங்கு முடக்கியிருப்பதாகக் கூறுகிறார்.

"கரோனா குறித்து எங்களுக்குப் பயமாக இருக்கிறது. தெய்வத்தைத்தான் நாங்கள் நம்பிக்கொண்டிருக்கிறோம்" என்று கையறு நிலையில் கூறுகிறார் சின்னசாமி.

இவ்வளவுக்கு இடையிலும், இருளர் பழங்குடியின பள்ளி மாணவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்துத் திட்டமிட்டு வருகின்றனர்.

திண்டிவனத்தைச் சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத பழங்குடியின மாணவர் 12-ம் வகுப்பு தேர்வெழுதியிருக்கிறார்.

"வீட்டிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் படித்தேன். 'வொக்கேஷனல்' பிரிவு என்பதால் எங்களுக்கு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்துவிட்டது. இப்போது எங்களுக்குச் சாப்பாட்டுக்கே கஷ்டமாக இருக்கிறது. கஞ்சி மட்டும் தான். குழம்பெல்லாம் இல்லை.

எங்கள் பகுதியில் கல்லூரி முடித்தவர்களுக்கும் வேலை இல்லை. இங்கு யாருக்கும் மாதச் சம்பளம் இல்லை. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கலாம் என இருக்கிறேன். அதுதான் என் 'லட்சியம்'. கஷ்டப்பட்டு படிக்க வைப்பதாக வீட்டிலும் சொல்லியிருக்கின்றனர்" என்று எதிர்காலக் கனவு குறித்துக் கூறுகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடி ரவி, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் சிக்கிக்கொண்டவர்கள் குறித்து அச்சம் கொள்கிறார்.

"இந்தப் பகுதியில் உள்ள இருளர் பழங்குடிகள் பலரும், திண்டுக்கல், நாமக்கல், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களுக்குச் சென்றுவிடுவர். செங்கல் சூளைகள், கரும்பு வெட்டுதல், தார் போடுதல், கேபிள் பள்ளம் தோண்டுதல் உள்ளிட்ட வேலைகளை அவர்கள் செய்வார்கள். நான் விவசாயக்கூலி.

கோயம்புத்தூர், திருப்பூர், கொடைக்கானல் போன்ற பகுதிகளில் பலரும் மாட்டிக்கொண்டிருக்கின்றனர். கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலும் சிக்கியுள்ளனர். அவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதியும் இல்லை என போனில் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் தோட்டங்களில் வாட்ச் மேனாக இருந்தவர்கள் திருப்பூரில் பனியன் கம்பெனிக்குச் சென்றவர்கள், கேரளாவில் மிளகு எடுக்கச் சென்றவர்கள் மாட்டிக்கொண்டுள்ளனர். மனைவி, கணவன் என தம்பதிகள் வேறு வேறு இடத்தில் இருக்கின்றனர். அவர்களை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார், ரவி.

தொழிலுக்காக வேறு மாவட்டங்களுக்குச் சென்றவர்களின் பிள்ளைகள் இங்கு மிகவும் கஷ்டமான சூழலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறுகிறார் ரவி.

"வேலை, பள்ளிக்கூடங்களுக்குச் சென்றால் அங்கு உணவு கிடைக்கும். இப்போது அதுவும் இல்லை. வேலை செய்தால் பசி தெரியாது. வீட்டிலேயே இருப்பதால் பசி அடிக்கடி எடுக்கும். பெற்றோர்கள் வேறு இடங்களில் இருக்க அவர்களின் பிள்ளைகள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மளிகைப் பொருட்கள் வாங்கவே 3 கி.மீ நடந்து செல்ல வேண்டும். எல்லாப் பொருட்களும் விலையேறிவிட்டது. பண்ணைக்கீரை, முருங்கைக்கீரை, குப்பைக்கீரையை வைத்துச் சமாளிக்கிறோம்" என வேதனையுடன் கூறுகிறார்.

சமவெளிப் பகுதிகளில் வாழும் பழங்குடிகளின் நிலைமை இதுவென்றால், மலைக்கிழங்குகள், சர்க்கரையே இல்லாத வர டீ, உப்பே இல்லாத கஞ்சி என, மலைவாழ் பழங்குடிகளின் வாழ்க்கை கழிகிறது.

கோவை மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டியுள்ள பணப்பள்ளி எனும் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் இருளர் பழங்குடி முருகேஷ். கட்டிட வேலையால் இவருக்கு நாளொன்றுக்கு ரூ.400 கிடைத்து வந்த நிலையில், அதனை இல்லாமல் ஆக்கியிருக்கிறது இந்த ஊரடங்கு.

"ஆனைக்கட்டியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கும் மலைக்கிராமம்தான் பணப்பள்ளி. எங்களுக்கு 10 நாள் வேலை இருக்கும், 10 நாள் வேலை இருக்காது. இப்போது எந்த நாளும் வேலை இல்லை. வண்டியில் யாராவது வந்து கொடுப்பதை வைத்துத்தான் குடும்பம் நடத்துகிறோம்" என்கிறார்.

தங்களின் தனித்த உணவுப்பழக்கம்தான் இந்த ஊரடங்கு காலத்திலும் கைகொடுப்பதாகக் கூறும் முருகேஷ், எப்போதும், மற்றவர்களிடமிருந்து விலகி இருத்தலையே அங்குள்ள பழங்குடிகள் விரும்புவதாகக் கூறுகிறார்.

"எப்போதும் மற்றவர்களிடமிருந்து விலகிதான் இருக்கிறோம். இப்போதும் அப்படித்தான் இருக்கிறோம். மலைக்கிழங்கைத் தோண்டி சாப்பிடுவோம். அதைத்தோண்டி எடுக்க 2-3 மணி நேரம் ஆகும். மலைக்கிழங்கில் இரண்டு வகைகள் உள்ளன. வெத்தலைக் கிழங்கு, முள் வள்ளிக்கிழங்கு. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அவித்தும், தீயில் சுட்டும் சாப்பிடலாம்.

எங்கள் பெண்களுக்கு சிலிண்டரைப் பயன்படுத்தத் தெரியாது. விறகு அடுப்பில்தான் நாங்கள் சமைப்போம். கேழ்வரகு, சோளம், கம்பு, கொள்ளு உள்ளிட்ட தானிய வகைகளைச் சாப்பிடுவோம். இப்போது அதனை வாங்க முடிவதில்லை. ஆங்காங்கே கிடக்கும் சீங்கைக் கீரையை சாப்பிடுவோம். அதனை பச்சையாகவும் சாப்பிடலாம், வேக வைத்தும் சாப்பிடலாம். இது கேஸ் தொந்தரவை சரிசெய்யும். இந்தத் தொந்தரவுக்கு நாங்கள் மருத்துவமனைக்குச் செல்ல மாட்டோம்.

மருத்துவமனை பக்கத்தில் இல்லை. அதனால், போக வர 500 ரூபாய் செலவாகும் என்பதால் இதற்கெல்லாம் மருத்துவமனைக்குச் செல்ல மாட்டோம். ஆனால், வயிற்று வலி, காய்ச்சல் என எங்களால் குணப்படுத்த முடியாததற்கு மருத்துவமனைக்குத்தான் செல்வோம்" என்கிறார் முருகேஷ்.

கேரள எல்லையை ஒட்டியுள்ள சோளம்பாளையம் எனும் மலைக்கிராமத்தைச் சேர்ந்த தோட்ட வேலை செய்து வரும் செல்வன், நோய்த்தொற்றைத் தடுக்க தாங்களாகவே கசாயம் வைத்துக் குடித்து வருவதாகக் கூறுகிறார்.

"இங்கு பலரும் தோட்ட வேலைகளைத்தான் செய்து வருகின்றனர். ஒரு நாளைக்கு ரூ.300 கிடைக்கும். அந்த வேலையும் நிரந்தரம் இல்லை. ஒரே சாலை தான் இருக்கிறது. ஒரு பேருந்துதான் ஒரு நாளைக்கு வரும். மருத்துவமனைக்குச் செல்ல வசதியில்லை. காய்ச்சல் என்றால் கூட 6-7 கி.மீ. தள்ளி ஆனைக்கட்டி சென்றுதான் பார்க்க வேண்டும்.

கரோனாவில் இருந்து காத்துக்கொள்ள வெளியில் இருந்து வருபவர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை. இளைஞர்களே சேர்ந்து இதனைக் கண்காணிக்கிறோம். அடிக்கடி கீரைதான் சாப்பிடுவோம். ஆடாதொடை இலை, சுக்கு, இஞ்சி சேர்த்து கசாயம் வைத்துக் குழந்தைகளுக்கும் கொடுக்கிறோம்" என்றார் செல்வன்.

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவை சேர்ந்த பால்குறும்பர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த மாரிநந்தனிடம் பேசினோம்.

"இந்தப் பகுதியில் 32 குடும்பங்கள் உள்ளன. எங்க அப்பா பெயரில் ஒரு ஏக்கர் தேயிலைத் தோட்டம் உள்ளது. மாதத்திற்கு ரூ.7,000-ரூ.8,000 வரும் அவ்வளவுதான். அதுவும் மாதம் முழுவதும் வேலை செய்தால்தான். ஊரடங்கு என்பதால், தேயிலை கொள்முதல் நிலையத்திற்கு வாரம் 2 நாட்கள் தேயிலைகளைப் பறித்துக் கொடுக்கலாம் என அறிவித்துள்ளது.

ஒரு ஏக்கரில் மாதம் முழுவதும் வேலைசெய்ய முடியாது. அங்கு வேலை முடிந்துவிட்டால் வெளியில்தான் கூலி வேலை செய்ய வேண்டும். வெளியில் வேலைக்குச் சென்றால் ஒரு நாளைக்கு 400-600 ரூபாய் தான். அதுவும் பெண்கள் என்றால் 200-400 ரூபாய். பச்சைத் தேயிலைக்கு கிலோ ரூ.12 என நிர்ணயித்துள்ளனர். ஏலத்தைப் பொறுத்து கிலோவுக்கு இவ்வளவு தொகை என நிர்ணயிக்கப்படும்" என்கிறார், மாரிநந்தன்.

அட்டப்பாடியில் உள்ள குறும்பர் பழங்குடிகள்: பிரதிநிதித்துவப் படம் | துளசி கக்கட்

காடுகள் மீதும்அங்கு கிடைக்கும் மூலிகைகளிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் பழங்குடிகள்.

"காடு சார்ந்த ஆன்மிகத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, அதன் வழியில் சில மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தி வருகிறோம். கசப்புத்தன்மையுள்ள கீரைகளைச் சமைத்து உண்ணுகிறோம். அதனால் நோயைத் தீர்க்க முடியுமா என்பது தெரியவில்லை. இருந்தாலும் நாங்கள் அதனைக் கடைப்பிடித்து வருகிறோம்.

கைகளைக் கழுவுதல், வெளியே சென்று வந்தால் சுத்தமாக இருப்பது இப்போது என்றில்லை. அரசாங்கம் சொல்வதற்கு முன்பே நாங்கள் கடைப்பிடித்து வருவதுதான். சுயக் கட்டுப்பாடு எங்களுக்கு இருக்கிறது. மற்ற ஊர்களில் இருந்து வருபவர்கள் எவ்வளவுதான் பழக்கமாக இருந்தாலும் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறோம். குழந்தைகளை வெளியில் செல்ல விடாமல் கட்டுப்படுத்துவது மட்டும் கஷ்டமாக இருக்கிறது" என்றார் மாரிநந்தன்.

பல ஆண்டுகளாக தங்களைப் பழங்குடி சமூகத்தில் சேர்க்கச் சொல்லி வலியுறுத்தி வரும் புலையர் சமூகத்தைச் சேர்ந்த கோவை மாவட்டம் கீழ்பூணாச்சி கிராமத்தில் வசித்து வரும் சரண்யாவிடம் பேசினோம்.

"இங்கு 42 குடும்பங்கள் உள்ளன. வனத்துறையினர் எங்களுக்குச் சொந்தமான இடங்களில் தேக்கு மரம் வைத்துள்ளனர். ஊருக்குப் பொதுவாகவே இரண்டே கால் ஏக்கர் நிலம் தான் உள்ளது. கட்டிட வேலை, தோட்ட வேலை உள்ளிட்டவற்றை மலைக்குக் கீழ் சென்று செய்வோம்.

குழந்தைகளை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியவில்லை. யாரோ தன்னார்வலர்கள் காய்கறி கொடுத்தால் சமைப்போம். சிலர் மளிகைப் பொருட்கள் கொடுத்தனர். அவர்களே திரும்பத்திரும்ப செய்வார்கள் என நினைக்கக் கூடாது.

4-5 கி.மீ. தள்ளிதான் இங்கு மளிகைக் கடைகளே உள்ளன. யாராவது ஆண்கள் சென்றால் அவர்களிடம் இருக்கும் பணத்தைக் கொடுத்துவிடுவோம். அரசு கொடுத்த 1,000 ரூபாய் ஒரே வாரத்தில் முடிந்துவிட்டது. இப்போது அதிகமாக டீ தான் குடிப்போம். இந்த ஏரியாவில் அதுதான் கிடைக்கும். பால் சேர்க்காத வரடீ வைத்துக் குடிப்போம். பாலும் வாங்க முடியாது. சர்க்கரையே இல்லையென்றாலும் வெறும் வரடீ வைத்துக் குடிப்போம். டீத்தூளும் வாங்குவதற்கு வழியில்லை. நன்னாரி வேரில் டீ வைத்துக் குடிப்போம். கணக்கே இல்லாமல் டீ குடிக்கிறோம்.

காட்டுக் கிழங்கு கிடைக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு ஆள் உயரத்துக்குத் தோண்டினால்தான் அந்தக் கிழங்கு கிடைக்கும். அரை கிலோ சர்க்கரை ரூ.30. அரை கிலோ டீத்தூள் 140 ரூ. நாங்கள் 50 கிராம்தான் வாங்குவோம். 4-வது படிக்கும் மகன், 2-வது படிக்கும் மகள், 5 வயதில் மகன் இருக்கிறான். விளையாடிவிட்டு வந்து சாப்பிடக் கேட்பார்கள். நம்மிடம் எதுவும் இருக்காது, மிகவும் சங்கடமாகிவிடும். கொடுத்துப் பழக்கப்படுத்தி விட்டுட்டோம். உப்பு கூட வாங்க முடிவதில்லை. உப்பு காலியாகி 2-3 நாட்களாகிவிட்டது. மற்றவர்களிடமும் இந்தச் சமயத்தில் கேட்க முடியாது" என்கிறார் சரண்யா.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதும் சுமார் 8 கோடியே 45 லட்சம் பழங்குடிகள் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 8.14%. இந்தியா முழுக்க 449 பழங்குடிகள் மற்றும் துணை இனக்குழுக்கள் உள்ளன. இவர்களுள் பாதிக்கும் மேலான பழங்குடிகள் காடுகளில் வாழ்கின்றனர். அவர்களின் பொருளாதாரம் முழுக்க காடு சார்ந்ததுதான்.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 7.21 லட்சம் பேர் தான் பழங்குடிகள். இது மொத்த மக்கள்தொகையில் 1.10% தான். தமிழகத்தில் 36 பழங்குடிகள் மற்றும் துணை இனக்குழுக்கள் உள்ளனர். இவர்களின் கல்வியறிவு 27.9 சதவீதமாக உள்ளது.

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பூபாலன் பழங்குடிகளின் நிலை குறித்துக் கூறுகையில், "சமவெளியில் வாழும் பழங்குடிகள் செங்கல் சூளைகளில் வேலை செய்கின்றனர். கல்யாண மண்டபங்களில் இலை எடுத்தல், அரிசி ஆலைகளில் வேலை செய்கின்றனர். மொத்தமாக ஒரு தொகையை அவர்களுக்கு முதலாளிகள் கொடுத்துவிடுவார்கள். அதன்பிறகு குடும்பமே கொத்தடிமையாக இருந்து அங்கு வேலைகளைச் செய்ய வேண்டும். பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக இருக்கின்றனர்.

அவர்களுக்கு சாதிச் சான்றிதழே பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகுதான் கிடைக்கின்றன. அது கிடைத்தால் தான், அவர்களின் பிள்ளைகள் கல்லூரிப் படிப்பு வரை செல்ல முடியும்.

இருளர் உள்ளிட்ட பல பழங்குடிகளுக்கு பட்டா நிலம் கிடையாது. நீர்நிலைகள் அருகில்தான் அவர்கள் டென்ட் அமைத்து வாழ்வார்கள். சில இடங்களில் அவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், அது அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஒத்துவராத இடங்களாகத்தான் இருக்கின்றன. கல்வியறிவு அவ்வளவாக இல்லை. பொருளாதார வசதி கிடையாது. குறுகிய எல்லைக்குள்ளேயே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். அவர்கள் நீட்சியை விரும்பவில்லை.

இந்த ஊரடங்கு சமயத்தில் பழங்குடிகளுள் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் ரேஷன் பொருட்கள் கொடுக்க வேண்டும்.பழங்குடி மக்கள் வாரியத்தில் பலர் பதிவு செய்யவில்லை, 2,000 நிவாரணம், வாரிய அட்டை இல்லாதவர்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. அனைத்துப் பழங்குடி குடும்பங்களுக்கும் இந்த உதவித்தொகை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுக்கிறார் பூபாலன்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x