Published : 05 May 2020 08:03 AM
Last Updated : 05 May 2020 08:03 AM
நெடுஞ்சாலைத் துறையில் மின்னணு முறையில் ஒப்பந்தம் கோரப்படுவதால் முறைகேட்டுக்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் நெடுஞ்சாலைத் துறை பணிக்கு ஒப்பந்தம் விடுவதில் முதல்வர் அவசரம் காட்டுவது ஏன் என்று கேட்டு திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கைவெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சாலை உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க பல்வேறு முகமைகளுடன் ஆலோசித்து புதுமையான வழிமுறைகளை அதிமுக அரசுகொண்டு வந்துள்ளது. அதில்ஒன்று, செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையாகும்.
இந்த முறையில், ஒப்பந்ததாரர் மூலம் ஒரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சாலைகள் மற்றும் அதில் உள்ள பாலங்களை அகலப்படுத்தி, மேம்படுத்தி தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படும்.
கடந்த 2019-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கையின்போது தஞ்சையில் இத்திட்டத்தை செயல்படுத்த அறிவிக்கப்பட்டது. கடந்த பிப்.19-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு, பிப்.25-ம் தேதி மின்னணு ஒப்பந்தமும் கோரப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி பெறும் நிலையில் உள்ளது.
இதில் எந்த நடைமுறையும் மீறப்படவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தத்தில் ஊழல் என்று ஸ்டாலின் அறிக்கை விட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.
இந்த ஒப்பந்தப்புள்ளி தொடர்பாக திமுகவின் துரை ஜெயக்குமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு முகாந்திரம் இல்லை என ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் ரிட் மனுவாக மாற்ற அனுமதி கோரப்பட்டு நீதிமன்றம் ஏற்றது.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்இதை திரித்து, ஒப்பந்தத்தில் முறைகேடு என நீதிமன்றம் சுட்டிக்காட்டியதாக உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நீதிமன்றத்தில் வழக்கு ஆரம்ப நிலையில் இருக்க, வழக்கை இழுத்தடிக்க அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்யலாம் என ஸ்டாலின் கூறியிருப்பது அரசுக்கு அவப்பெயர் உண்டாக்கும் உள்நோக்கத்தை காட்டுகிறது.
மின்னணு முறையில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதால் தகுதியான ஒப்பந்ததாரர்கள் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்க முடியாது. எனவே, இதில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை.
திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட ரூ.200கோடி அனுமதித்து, பின்னர் வழங்கப்பட்டது ரூ.450 கோடியாகும். சாலை திட்டத்துக்காக கூடுதலாக 75 சதவீதம் வழங்கப்பட்டதுதான் ஊழலாகும். ஊரடங்கு காலத்தில் தன்னை மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காகவே ஸ்டாலின் தினமும் அரசை குறைகூறி அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
இவ்வாறு அறிக்கையில் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT