

சென்னையில் உள்ள 2 பிரதான ரயில்நிலையங்களிலும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தட்டுமுட்டு சாமான்கள், பெரிய துணிப்பைகளுடன் 15 வயதுமுதல் 60 வயது வரையுள்ள ஆண்களும்,சில நேரம் சிறு குழந்தைகளுடன் பெண்களும் கும்பல் கும்பலாக காத்திருப்பதை காண முடியும். இவர்கள் அனைவரும் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தவர்கள் அல்ல. தங்கள் ஊரில் விவசாயம் இல்லாததாலும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காததாலும் புலம் பெயர்ந்து வந்தவர்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகமானது இப்படி பிஹார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுடன், நாகலாந்து உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் புகலிடமாக மாறியுள்ளது.
கட்டுமானம், சாலைப்பணிகள், மார்பிள், கிரானைட் பணி, ஆயத்த ஆடை, இரும்பு தொழில், செங்கல் சூளை, மிகப்பெரிய வணிக நிறுவனங்கள், உணவகங்கள், முடித் திருத்தகங்கள் என அனைத்து பணிகளிலும் தற்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பங்கு அளப்பரியதாகும்.
குறைந்த சம்பளம், சளைக்காத வேலை
இதுகுறித்து தொழில்முனைவோரான ராமசாமி கூறும்போது, ‘‘வெளிமாநிலத் தொழிலாளர்கள் வேலையில் நேரம் காலம் பார்ப்பதில்லை. தமிழகதில் உள்ளவர்கள் ஓட்டுநராக இருந்தால், அந்த வேலையைத் தவிர வேறு வேலை செய்வதில்லை.
ஆனால், வெளிமாநில தொழிலாளர் வாகன ஓட்டுநராக வேலை பார்த்தால், வாகனத்தின் பராமரிப்பையும் சேர்த்து பார்த்துக் கொள்வார்கள். லாரி ஓட்டுநராக இருந்தால் பொருட்களை ஏற்றி, இறக்குவதற்கும் உதவுவார். இதுபோல சம்பளம் குறைவு, ஒரேநேரத்தில் பல வேலைகளை சலிக்காமல் பார்ப்பது என பல பயன்கள் இவர்களிடம் உள்ளது’’ என்றார்.
வெளிமாநில தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வளவு பேர் தற்போது இருக்கின்றனர் என்பதே தெரியாத நிலைதான் உள்ளது.
புள்ளிவிவரம் தேவை
கடந்த ஏப்9-ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பின்போது, முதல்வர் பழனிசாமி, கட்டுமானப்பணியில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 74 பேரும், உணவகங்களில் 20 ஆயிரத்து 294 பேரும், கரும்பு வெட்டும் பணியில் 3,500 பேரும், இதர பணிகளில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 85 பேரும் இருப்பதாக தெரிவித்தார். இதன்படி, தமிழகத்தில் இருப்பதாக அரசின் பதிவில் இருப்பது 3 லட்சத்து 6 ஆயிரத்து 956 பேராகும். ஆனால், பதிவு செய்யாமல் இதர பணியில் இருப்போர் எண்ணிக்கை மேலும் 3 லட்சத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.
எனவே, எத்தனை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதில் துல்லியமான புள்ளிவிவரங்கள் தமிழக அரசிடம் தற்பாது வரை இல்லை. எனவேதான், வெளிமாநில தொழிலாளர்களை சரியாக கணக்கெடுத்து அரசிடம் அளிக்கும்படி சென்னை மாநகராட்சி மற்றும் இதர 36 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், வெளிமாநிலத்தவர்களுக்கு கரோனா பரவல் சோதனையை ஏற்படுத்தியுள்ளது.
பணியிழந்து தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய்யும், வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் ஆங்காங்கே தங்குமிடம் உருவாக்கப்பட்டு உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களில், 4-ல் ஒரு பங்கினர் கட்டுமானப் பணியில் உள்ளனர். அதற்கு அடுத்ததாக குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். பதிவுபெற்ற தொழிற்சாலைகளில், அந்த தொழிலாளர்கள் விவரங்களை நிர்வாகங்கள் வைத்துள்ளன. மற்ற இடங்களில் வேலைபார்க்கும் புலம்பெயர்ந்தோர் பற்றிய புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை.
கரோனா பிரச்சினைக்குப் பிறகுதான் புலம் பெயர்ந்த தொழிலாளர்களைக் கணக்கெடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளர்களை கணக்கெடுத்து வருகிறோம். அதன்பிறகுதான் உணவகம், செக்யூரிட்டி போன்ற பிற தொழில்களில் வேலை செய்வோரை கணக்கெடுப்போம். அதையடுத்து Inter state Migrants Act-ன் கீழ் பதிவு செய்யப்படுவார்கள்.
பதிவு செய்யாமல் பணி செய்வோர், பதிவு செய்யாதவர்களை பணியமர்த்துவோர் மீது சட்டப்படி தண்டிக்க சட்டவிதிகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர், துணை ஆணையரிடம் பதிவுக்காக விண்ணப்பிக்கலாம். பெரியதொழிற்சாலையாக இருந்தால் இணைபாதுகாப்பு ஆணையரிடம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், ஆதார் அட்டைஉள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து அவர்களுக்கு ஆன்-லைன் மூலம் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.