Published : 05 May 2020 06:49 AM
Last Updated : 05 May 2020 06:49 AM

232 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 108 பேர் மட்டுமே உள்ளனர்; சுகாதார ஆய்வாளர்கள் பற்றாக்குறையால் சென்னையில் கரோனா அதிகரிப்பு?- கண்காணிப்பைவிட களப்பணியே உடனடி தேவை

சென்னை

சென்னையில் பல்கிப் பெருகும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த கண்காணிப்பு அதிகாரிகளை அரசு நியமிப்பதை விட, முதலில்கள அதிகாரிகளான சுகாதார ஆய்வாளர்களை அரசு உடனடியாகநியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னையில் மே 3-ம் தேதி நிலவரப்படி 1,458 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதிகபட்சமாக திரு.வி.க. நகர் மண்டலத்தில் 324, ராயபுரத்தில் 275, கோடம்பாக்கத்தில் 199, தேனாம்பேட்டையில் 166, அண்ணாநகரில் 130, தண்டையார்பேட்டையில் 118 பேர் என 6 மண்டலங்களில் மட்டும் 1,212 பேர் (83 சதவீதம்) தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.தொற்று பெருகுவதற்கு மக்கள் அடர்த்தியும் (சதுர கி.மீட்டருக்கு 55 ஆயிரம்), அதிக பரிசோதனையும் ஒரு காரணம் என அரசு கூறுகிறது. ஆனால் கள அதிகாரிகளான சுகாதார ஆய்வாளர்கள் பாற்றாக்குறைதான் முக்கிய காரணம் என்றுபொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் 232 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. இதில் தற்போது 108 பேர் மட்டுமே உள்ளனர்.124 பணியிடங்கள் காலியாக உள்ளன. நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி பல ஆண்டுகளாக இப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

அளப்பரிய பணி

மாநகராட்சி வார்டுகளில் கொசு ஒழிப்பு முதல் பிறப்பு, இறப்புபதிவு வரை ஒரு வார்டின் பொது சுகாதாரத்தை பாதுகாப்பவர்கள்தான் சுகாதார ஆய்வாளர்கள். தற்போது கரோனோ தொற்று பெருகி வரும் நிலையில் இவர்களின் பங்கு அதிமுக்கியத்துவம் பெறுகிறது. இவர்கள்தான் களத்தில் நோயாளிகளை கண்டுபிடிப்பது, அவர்களுக்கு தொற்று ஏற்பட்டதற்கான தடத்தை தேடுவது, அவர்களை பரிசோதனை மற்றும்மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வது, நோய் உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பது, அவர்களை பரிசோதிப்பது, அன்றாட புள்ளிவிவரங்களை மண்டலங்களுக்கு அனுப்புவது, கரோனா தொற்றால் உயிரிழந்தோரை உரிய விதிகளை பின்பற்றி மயானங்களில் அடக்கம் செய்வது, கிருமிநாசினி தெளிப்பது, வெளிமாநிலத்தினர் முகாம்களுக்கு உணவு வழங்குவது என சுகாதார ஆய்வாளர்களின் பணி அளப்பறியது.

எனவே, முதலில் தேவையான சுகாதார ஆய்வாளர்களை நியமித்துவிட்டு, அதன் பிறகே கண்காணிப்பு அதிகாரிகளை அரசு நியமித்திருக்க வேண்டும். ஆனால் அரசோ 14 ஐஏஎஸ், 6 ஐபிஎஸ், 1 எஸ்பி, 6 டிஎஸ்பி, 9 டிஆர்ஓ, இணை மற்றும் துணை இயக்குநர் பதவியில் 10 சுகாதார அதிகாரிகள் என 46 கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கள அதிகாரிகள் இன்றி, கண் காணிப்பு அதிகாரிகளால் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே முதலில் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

களப் பணியாளர்களை அதி கரிப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “தற்காலிக அடிப்படையில் 500 சுகாதார ஆய்வாளர்கள், ஆய்வக தொழில்நுட்புநர் உள்ளிட்டோரை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x