Published : 04 May 2020 03:48 PM
Last Updated : 04 May 2020 03:48 PM
ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படும் அரிசி இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் இன்று வெளியிட்ட அறிக்கை:
“கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரொக்க உதவித் தொகையாக தலா ரூ. 1000/- வீதம் ஏப்ரல் மாதத்தில் வழங்குவதற்கும், விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை வழங்குவதற்கும் முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி ரொக்க உதவித் தொகையாக ரூ. 1000/- வழங்குவதற்கு ரூ. 2014.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.98.68 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவித் தொகையும், 96.30ரூ குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொருட்களும் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் முதல் ஜூன் முடிய PHH மற்றும் முன்னுரிமை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு (PHH) நபர் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் விலையில்லாமல் அரிசி வழங்குவதற்கு மத்திய அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கனவே அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசால் அரிசி விலையில்லாமல் வழங்கப்பட்டு வருவதால் முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைதாரர்கள் (NPHH) உட்பட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நபர் ஒன்றுக்கு கூடுதலாக 5 கிலோ வீதம் ஏப்ரல் முதல் ஜூன் முடிய 3 மாதங்களுக்கு அரிசி விலையில்லாமல் வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார்கள்.
இதற்கான அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ. 22.00 வீதம் இந்திய உணவுக் கழகத்திலிருந்து கொள்முதல் செய்வதற்கு ரூ. 438 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1.99 இலட்சம் மெ.டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதன்படி, 1.5 யூனிட் குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் 14 கிலோ அரிசியை 20 கிலோவாக உயர்த்தியும், 2 யூனிட் குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் 16 கிலோ அரிசியை 20 கிலோவாக உயர்த்தியும், 3 யூனிட் குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் 20 கிலோ அரிசியை 30 கிலோவாக உயர்த்தியும், 4 யூனிட் குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் 20 கிலோ அரிசியை 40 கிலோவாக உயர்த்தியும், 5 யூனிட் குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் 25 கிலோ அரிசியை 50 கிலோவாக உயர்த்தியும், இவ்வாறாக இதற்கு மேல் யூனிட்டுகள் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அவர்கள் வாங்கும் அரிசி இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு ஏப்ரல் மாதத்திற்கான கூடுதல் அரிசி 50 சதவீதம் மே மாதத்திலும், மீதமுள்ள 50 சதவீதம் ஜூன் மாதத்திலும் அந்தந்த மாதத்திற்கான அளவுடன் சேர்த்து வழங்கப்படும் என்பதற்கான அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவையும் அந்தந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தகுதியான அளவு சர்க்கரையும் ஏப்ரல் மாதத்தில் வழங்கியதைப் போன்று நடப்பு மே மாதத்தில் விலையில்லாமல் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேற்கண்டவாறு விலையில்லாமல் சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்குவதற்காக மாதம் ஒன்றுக்கு ரூ. 184.31 கோடி வீதம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு கூடுதலாக ரூ. 368.62 கோடி முதல்வர் உத்தரவுப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு விலையில்லாமல் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை குடும்ப அட்டைதாரர்கள் கூட்ட நெரிசலின்றி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து விலையில்லாமல் பெற்றுக் கொள்ள ஏதுவாக நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கும் வகையில் தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு கடந்த 02.05.2020 மற்றும் 03.05.2020 ஆகிய நாட்களில் வீடு வீடாக சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலமாக டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து (04.05.2020) இந்தப் பொருட்கள் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல்
24.03.2020 முதல் கரோனா நோய் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிகள் மற்றும் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் முகக்கவசம், கையுறைகள், மற்றும் சுத்திகரிப்பு திரவங்கள் ஆகியவை வழங்கப்பட்டு, 24.03.2020 முதல் 30.04.2020 முடிய 836 நெல் கொள்முதல் நிலையங்களில் 33,630 விவசாயிகளிடமிருந்து 2,44,647 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு கொள்முதல் பருவத்தில் 30.04.2020 வரை டெல்டா மாவட்டங்களில் 1523 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 16,22,639 மெ.டன்னும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் 536 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 4,80,796 மெ.டன்னும், கூட்டுறவு துறை மற்றும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு இணையத்தின் மூலம் 22 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 1,05,351 மெ.டன்னும், மொத்தம் 2081 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22,08,786 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகையும் சேர்த்து மொத்தம் 4177.40 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3,71,353 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யும் பொருட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
நடப்பு கே.எம்.எஸ் 2019-2020-ஆம் பருவத்தில் மொத்தம் 28 இலட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொள்முதல் அளவானது தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொள்முதல் சாதனையாக அமையும். மேலும், மத்திய அரசால் வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத் தொகையும் சேர்த்து வழங்கப்படுவதாலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 24 மணி நேரத்திற்குள் நேரடியாக செலுத்தப்படுவதாலும் விவசாயப் பெருங்குடி மக்கள் தாங்கள் விளைவித்த நெல்லை தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே ஆர்வத்துடன் கொண்டு வந்து விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர்.
மேலும், பொது மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை இடைத்தரகர்கள் பதுக்கி அதிக விலைக்கு விற்க முயற்சிப்பதை தடுக்கும் வகையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினரால் மாநிலம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதைத் தவிர, வெளி மாநிலங்களில் இருந்து வரப்பெறும் உணவுப் பொருட்களின் வரவினை முறைப்படுத்தவும், உயர் அதிகாரிகளை கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைத்து பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழ் நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன கிடங்குகளில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சேமித்து வைத்து வங்கிகள் மூலம் கடன் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இன்றளவில் இக்கிடங்குகளில் சுமார் ஒரு லட்சம் மெ.டன் கிடங்கு கொள்ளளவு வசதி இருப்பதால் விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.
இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT