Published : 04 May 2020 12:13 PM
Last Updated : 04 May 2020 12:13 PM
கரோனா நோயாளிகளைக் களங்கப்படுத்தும் வகையில் செய்திகளையோ, பதிவையோ போடவேண்டாம். இது ஒரு கிருமித் தாக்குதல் நோய். அவ்வளவுதான். முறையாக நடந்தால் சரியாகும் என்கிற எண்ணத்தை மக்களிடம் உருவாக்க வேண்டும் என்று கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியும் வருவாய் நிர்வாக ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் பேட்டி அளித்தபோது கூறியதாவது:
“ஒருமுகப்படுத்தப்பட்ட சோதனையினால் எண்ணிக்கை அதிகமாகும். எண்ணிக்கையைப் பொறுத்தவரை தயவு செய்து ஊடகத்தினர் பொதுமக்களிடம் கொண்டு செல்லுங்கள். மக்கள் பதற்றப்படவேண்டாம். மக்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்பதைக் கொண்டு செல்லுங்கள்.
இன்றைக்கும் மக்கள் ஊரடங்கு தளர்வைப் பயன்படுத்தி சில்லறைப் பொருட்கள், காய்கறி, மளிகை போன்ற பொருட்கள் வாங்க அடிக்கடிச் செல்லக்கூடாது. வீட்டுக்குள்ளும் அதிக கவனம் வேண்டும். கைகளைக் கழுவ வேண்டும், காய்கறிகளைக் கழுவ வேண்டும். தற்போது கோயம்பேட்டில் சோதனை நடத்தப்பட்டாலும், கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டிருந்தாலும் தெருக்களில் வரும் காய்கறி வியாபாரிகளையும் சோதனைக்கு உட்படுத்த உள்ளோம்.
6000க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகள் வரும்போது அவர்களையும் கணக்கிட்டு படிப்படியாக சோதனை நடத்த உள்ளோம். கோயம்பேட்டிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்றுள்ள தொழிலாளர்களைக் கணக்கெடுத்து அவர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களுக்குச் சோதனையும் நடத்தி நோய் பரவாமல் தடுக்கும் முயற்சியில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வெளி மாவட்டங்களில் நோய் பரவாமல் தடுக்கும் முயற்சியில் உள்ளனர். இன்னொன்று இது மறைக்ககூடிய நோயல்ல. இதைக் களங்கப்படுத்தக்கூடாது. கரோனா பாதிப்பு ஆட்களைக் களங்கப்படுத்தக்கூடாது. இது ஒருவகையான கிருமித் தாக்குதல் நோய் அவ்வளவே.
தமிழகத்தில் உயிரிழப்பு மிகவும் குறைந்து அதிகமானோர் டிஸ்சார்ஜ் ஆகிச் செல்கிறார்கள் என்பதையும் கொண்டு செல்லுங்கள். மத்திய, மாநில அரசுகள் உலக சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல் அடிப்படையில் யாரையும் களங்கப்படுத்தும் செய்திகள் வரக்கூடாது. இதுபோன்ற செய்திகளை மக்களிடம் கொண்டு சென்றால்தான் மக்களுக்கு நம்பிக்கை வரும்.
சமூக விலகல், கை கழுவுவது, முகக்கவசம் நிரந்தமாக அணிவது முக்கியம். மருத்துவ ரீதியாக அனைத்து வகையான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. நல்ல மருத்துவ சிகிச்சையினால்தான் இந்தியாவிலேயே அதிக அளவில் டிஸ்சார்ஜும், மரண எண்ணிக்கை மிகமிகக் குறைவாக உள்ள நிலையும் உள்ளது. இதற்குப் பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்களைப் பாராட்ட வேண்டும்.
சென்னையில் தினம் 3600 சாம்பிள்கள் சோதனை செய்யப்படுகின்றன. மருத்துவமனைகளில் நல்ல வசதி உள்ளது. நோயாளிகள் எங்களுக்கு அறிகுறி இல்லாத நிலையில் கோவிட் கேர் பகுதிக்கு மாற்றுங்கள் எனக் கேட்கிறார்கள்.
அதனால் டிஜி வைஷ்ணாவா உள்ளிட்ட மற்ற சில கல்லூரிகள், குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் சிலவற்றிலும், வர்த்தக மையம் போன்ற இடத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படுக்கை வசதிகள் இந்தியாவில் தமிழகத்தில் அதிகம் உள்ள மாநிலமாக உள்ளது”.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT