Published : 04 May 2020 11:40 AM
Last Updated : 04 May 2020 11:40 AM
குழாய்களைப் பலர் தொடுவதைத் தவிர்க்கும் வகையில் தானியங்கி கைகழுவும் கட்டமைப்பை வேளாண்மைப் பொறியியல் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
குழாய்களைப் பலர் தொடுவதைத் தவிர்க்கும் வகையில் தானியங்கி கைகழுவும் கட்டமைப்பை, வேளாண்மைப் பொறியியல் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் வேளையில், கைகள் மூலமாக ஒருவர் மூலம் மற்றொருவருக்குத் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் அடிக்கடி கைகளை சோப்புப் போட்டுக் கழுவுதல் அல்லது கிருமிநாசினி மூலம் கைகளைச் சுத்தம் செய்தல், முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றைப் பின்பற்ற உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகளில் சோப்புப் போட்டுக் கை கழுவுதல் அல்லது கிருமிநாசினி மூலமாக கைகளைச் சுத்தம் செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நபரும் தண்ணீர் குழாயைத் திறந்து கைகழுவி விட்டு அடைக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொருவராகத் தொடும் குழாய்கள் மூலமாகவும் கரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு கோவையில் உள்ள மத்திய வேளாண் பொறியியல் மைய விஞ்ஞானிகள் முனைவர் எஸ்.சையது இம்ரான், முனைவர் த.செந்தில்குமார் ஆகியோர், சென்சார் உதவியுடன் குழாயைத் தொடாமல், கைகழுவி கழிவுநீரை வெளியேற்றும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இது குறித்து அக்கட்டமைப்பை உருவாக்கிய விஞ்ஞானிகள் முனைவர் எஸ்.சையது இம்ரான், முனைவர் த.செந்தில்குமார் ஆகியோர் கூறுகையில், "பேட்டரியால் இயங்கக்கூடிய பம்பு, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, சென்சார் உதவியுடன் இயங்கும் சோப்புக் கரைசலை வெளியேற்றும் கலன் மற்றும் தண்ணீர் குழாய் ஆகியவற்றைக் கொண்டு இக்கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.
கைகழுவும் கலனுக்கு முன்பாக கைகளை நீட்டினால், அங்கு பொருத்தப்பட்டுள்ள சென்சாரால் உணரப்பட்டு, சோப்புக் கரைசல் வெளிவரும். அதைக் கொண்டு கைகளை நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்துவிட்டு, அருகில் உள்ள கை கழுவும் கலன் அருகே கைகளை நீட்ட வேண்டும்.
அது மீண்டும் சென்சாரால் உணரப்பட்டு பம்பு இயக்கம் மூலமாக தண்ணீரை வெளியேற்றும். கைகளை நன்றாகக் கழுவிவிட்டு, கைகளை எடுத்தவுடன் பம்பு இயக்கம் நிறுத்தப்பட்டு, தண்ணீர் தானாக நின்று விடும். இதனால் தண்ணீர் வீணாவதும் தடுக்கப்படுகிறது.
இதனால் ஒருவர் தொடும் இடத்தை மற்றொருவர் தொடும்போது ஏற்படும் அச்ச உணர்வு தவிர்க்கப்படுகிறது. பணியாளர்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் இக்கட்டமைப்பு பயனுள்ளதாக இருக்கும். இக்கட்டமைப்பானது எளிதாக ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்ல முடியும்" என்றனர்.
விஞ்ஞானிகள் உருவாக்கிய இக்கழுவும் கட்டமைப்பு கோவை மத்திய வேளாண்மைப் பொறியியல் மையத்தில் இன்று பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT