Last Updated : 02 Aug, 2015 09:33 AM

 

Published : 02 Aug 2015 09:33 AM
Last Updated : 02 Aug 2015 09:33 AM

மதுவிலக்கை அமல்படுத்தினால்தான் தந்தையின் உடலைப் பெறுவோம்: சசிபெருமாளின் மகன் நவநீதன் உறுதி

பூரண மதுவிலக்கை அரசு அமல் படுத்தினால் மட்டுமே சசிபெருமாள் உடலை வாங்குவோம், என்று அவரது இரண்டாவது மகன் நவநவீதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நவநீதன் மேலும் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டி என் தந்தை டவரில் ஏறி வெகு நேரம் கொளுத்தும் வெயிலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டபோது, மர்மமான முறை யில் இறந்துவிட்டார். எனது தந்தை எத்தனையோ போராட்ட களத்தை சந்தித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்று காந்தி சிலை அருகே 33 நாட்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

உயிரை துட்சமாக மதித்து அவர் நடத்திய போராட்டங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அப்போதெல்லாம் அவர் உடல் நிலை சிறிதளவுகூட பாதிக்காமல் வீடு திரும்பியுள்ளார்.

தற்போது, டவரில் ஏறி வெயிலில் நின்று போராடியபோது இறந்த சம்பவத்தை அறிந்து எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் எந்த கொள்கைக்காக உயிரை நீத்தாரோ அந்த கொள்கை நிறைவேறும் வரை நானும், எங்கள் குடும்பமும் ஓயப் போவதில்லை. பூரண மதுவிலக்கு கொள்கையை அரசு உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டால் மட்டுமே தந்தையின் உடலை வாங்குவதாக, எங்கள் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளோம். இதில் எவ்வித மான மாற்றுக் கருத்தும் இல்லை.

இத்தனை ஆண்டுகளாக தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு தனி மனிதனாக மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த போராட்டம் நடத்தி வந்த, என் தந்தைக்கான அக்கறையை கொஞ்சமேனும் அரசு செவி சாய்த்து, மதுக் கடைகளை தமிழகத்தில் மூட வேண்டும். அப்போதுதான், தமிழக மக்களால் காந்தியவாதி சசிபெருமாள் என போற்றப்படும் எனது தந்தையின் ஆத்மா சாந்தி அடையும்.

சாகும் வரை உண்ணாவிரதம் தமிழகத்தில் மதுக்கடையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் இளம்பெண்கள் வரை மது பழக்கத்துக்கு அடிமையாகி வரும் கலாச்சாரம் தீவிரமாக பரவி வருகிறது. மதுவின் கேடு குறித்து எனது தந்தை ஊர், ஊராக சென்று பிரச்சாரம் மேற்கொண்டும், அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த செவி சாய்க்க மறுத்து வருகிறது.

மக்களின் நலனுக்காக அரசு மதுக் கடையை மூட வேண்டும் என்று எனது தந்தை சசிபெருமாள் வலியுறுத்தி வந்தார். அவர் மறைவைத் தொடர்ந்து அவர் வழியில் நான் மதுவிலக்கை அரசு அமல்படுத்த வலியுறுத்தி அறப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்.

தமிழக அரசு பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி இன்று (2-ம் தேதி) சேலம், பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள காந்திசிலை முன்பு நானும், எனது சிற்றன்னை மகிளம் ஆகியோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இதற்கு அனுமதி கேட்டு சேலம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து மனு அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x