Published : 04 May 2020 09:40 AM
Last Updated : 04 May 2020 09:40 AM
நீட்டிக்கப்படிருக்கிற ஊரடங்கை மக்கள் தடையென்று நினைக்காமல் மக்களின் வருங்கால நல்வாழ்வுக்கானது என நினைக்க வேண்டும் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மே 4) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்திருப்பது கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் பயன் தரும்.
அதேசமயம் கரோனா பாதித்த மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 வண்ணங்களாக வகைப்படுத்தப்பட்டு, பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஊரடங்கில் தளர்வும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
தளர்வும், கட்டுப்பாடுகளும் எதற்காக என்றால் நோயைக் கட்டுப்படுத்த மட்டுமல்ல தொழில்கள் முடங்கிவிடக்கூடாது, பொருளாதார ரீதியாக முடக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, அனைத்துத் துறைகளையும் இயக்க முடியுமா, சிறு, குறு, நடுத்தரத் தொழில் தொடங்க வாய்ப்பு இருக்கிறதா, மக்கள் வாழ்வாதாரத்தைத் தொடரலாமா, வருமானம் ஈட்ட வாய்ப்பிருக்கிறதா போன்றவற்றையெல்லாம் பொருளாதார வல்லுநர்கள், பல்வேறு துறையைச் சேர்ந்த நிபுணர்கள் போன்றோருடன் ஆலோசனை செய்த பிறகே ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வு, கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.
எனவே, பாதுகாப்பாக தொழிலைத் தொடங்கவும், மக்களுக்கு வருமானம் கிடைக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் புதிய விதிமுறைகளுடன் ஊரடங்கை மேலும் நீட்டித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தத் தளர்வு, கட்டுப்பாடுகள் எல்லாம் கடைகள் திறக்கவும், தொழில்கள் தொடங்கவும் வழிவகுத்தாலும் இவையெல்லாம் பொதுமக்கள் அனைவருக்கும் பொருந்தாது. அதாவது குறிப்பிட்ட துறையைச் சார்ந்தவர்களுக்கும், அவசர, அவசியத் தேவைக்காக வெளியில் செல்லும் மக்களுக்கு மட்டும்தான் என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொண்டு ஊரடங்கை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
எனவே, நீட்டிக்கப்படிருக்கிற ஊரடங்கை மக்கள் தடையென்று நினைக்காமல் மக்களின் வருங்கால நல்வாழ்வுக்கான, முன்னேற்றத்திற்கான இடைவெளி என்று நினைத்துச் செயல்பட்டால், நிச்சயமாக இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்.
மேலும், கரோனா என்ற கொடிய நோயினால் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் மக்கள் அடைந்துள்ள சிரமத்தை தங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும், நாட்டுக்காகவும் தாங்கிக்கொண்டு மீண்டும் நாட்டின் பொருளாதாரம் வளம் பெற அடித்தளமாக செயல்பட வேண்டும்" என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT