Published : 03 May 2020 06:12 PM
Last Updated : 03 May 2020 06:12 PM
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால் தீவிர பரிசோதனை நடந்து வருகிறது.
பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவரது கணவர் லாரி ஓட்டுநர். கர்ப்பிணியான இந்தப் பெண்ணுக்கு அண்மையில் வளைகாப்பு விருந்து எளிய முறையில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டும் பங்கேற்று சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு சில நாட்களாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டது.
இதுபற்றி அறிந்த மாவட்ட சுகாதாரத் துறையினர், இது கரோனா தொற்றுக்கான அறிகுறியா என அறியும் முயற்சியில் உடனே இறங்கினர். அந்தப் பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சோதனையில் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
எனினும், அதை உறுதி செய்யும் வகையில் அடுத்த கட்ட பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பரிசோதனை முடிவின் அடிப்படையில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
மேலும், அந்தப் பெண் தவிர அவரது கணவர் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு பரிசோதனைகள் தேவையா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அந்த கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவசியமின்றி கிராமத்துக்குள் யாரும் நுழையவும், உள்ளிருப்போர் வெளியில் செல்லவும் தடை ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினரு தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். கிருமி நாசினி தெளித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் தீவிரம் அடைந்துள்ளன.
இதற்கிடையில், அந்தப் பெண் மணமாகிச் சென்றது ஈரோடு மாவட்டம். குழந்தைப் பேறுக்காக தாய் வீடான தருமபுரி மாவட்டத்துக்கு அவர் தற்போது வந்துள்ளார்.
எனவே, அவருக்கு தொற்று உறுதியானால் அவரை ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் சில அதிகாரிகள் தெரிவித்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT